‘பிரிம் மதில்மேல் பூனையாக இருந்தோரின் மனதை மாற்றியுள்ளது’

1brimஅரசாங்கம் 1மலேசியா மக்கள் உதவித் தொகை (பிரிம்) கொடுப்பது ஒரு தேர்தல் தந்திரம் , வாக்காளரைக் கவரும் நோக்கில் அது கொடுக்கப்படுகிறது என்றெல்லாம் கூறப்பட்டாலும் அது, மதில்மேல் பூனையாக இருந்தோரின் மனதை மாற்றுவதில் வெற்றி பெற்றிருக்கிறது என்கிறார் கல்வியாளர் ஒருவர்.

1brim redமலாயாப் பல்கலைக்கழக (யுஎம்) விரிவுரையாளர் டாக்டர் முகம்மட் ரெட்சுவான் ஒத்மான், தாம் மேற்கொண்ட ஆய்வில்  யாருக்கு ஆதரவு கொடுப்பது என்று முடிவு செய்ய இயலாமல் இருந்த 21 விழுக்காட்டினரிடையே பிரிம் பற்றிப் பேசியபோது அவர்களில் 87 விழுக்காட்டினர் உதவித்தொகை கொடுக்கப்படுவதை வரவேற்றனர் என்றார்.

“பிரிம் கிராமப்புறத்து வாக்காளர்களிடையே மட்டுமல்லாமல் இளம் வாக்காளர்களிடையேயும் மதில்மேல் பூனையாக இருந்தோரிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது வியப்பளிக்கிறது”. அவர், நேற்று மெர்டேகா மையம் ஏற்பாடு செய்திருந்த ‘13வது பொதுத் தேர்தலில் வெல்லப்போவது யார்’ என்ற கருத்தரங்கில் பேசியபோது இவ்வாறு கூறினார்.

“கிராமப்புறங்களில் பிரிம் பெரிய தாக்கம் ஏற்படுத்தி இருப்பதைப் பார்க்கலாம். அவர்கள் அதைப் பெரிதாக நினைக்கிறார்கள்”, என்று மலாயாப் பல்கலைக்கழகத்தின் மக்களாட்சி, தேர்தல் மையத்தின் (யுஎம்சிடெல்) முன்னாள் இயக்குனரான ரெட்சுவான் கூறினார்.

1brim crowd 2ஆனால், தம் குழுவினர் அடிநிலை மக்களிடையே நடத்திய ஆய்வில் 2011 தொடங்கி மாற்றரசுக்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் செல்வாக்கு உயர்ந்து வருவதைக் கண்டார்கள் என்றவர் சொன்னார்.  பிரதமர் நஜிப்பின் மக்கள் செல்வாக்கு கடந்த ஈராண்டுகளில் 2012-நடுவில் மிக உயர்வாக இருந்தது என்று கூறிய ரெட்சுவான், அப்போது அவர் ஏன் தேர்தலை நடத்தவில்லை என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது என்றார்.

“பிஎன்-எதிர்ப்பு மனநிலை வலுவாகவே உள்ளது. ஆனாலும் அப்படிப்பட்ட எதிர்ப்பு மனப்பான்மை கொண்டோரும்கூட வாக்களிப்பு என்று வரும்போது பிஎன்னுக்கு வாக்களிப்பதையே விரும்புகிறார்கள். அப்படிப்பட்ட அதிருப்தி கொண்டோரை தங்களுக்கு ஆதரவாக திருப்பி இருக்கவேண்டும் மாற்றரசுக் கட்சியினர். ஆனால், அவர்கள்  இன்னும் அதைச் செய்யவில்லை”, என்றாரவர்.

ஊழல் குற்றச்சாட்டு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை

இதனிடையே, மொனாஷ் பல்கலைக்கழகத்தின் அரசியல் துறைத் தலைவர் ஜேம்ஸ் சின், பொதுமக்கள் வேட்பாளர்களின் ஊழலை இடித்துரைக்கலாம், சாடலாம் ஆனால், வாக்களிக்கும்போது அதையெல்லாம் பார்ப்பதில்லை என்றார்.

“தாம் அறிந்தவரை எந்தவொரு தொகுதியிலும் வாக்காளர்கள்,  வேட்பாளர் ஊழல் செய்துள்ளாரா என்பதையெல்லாம் அலசி ஆராய்ந்து அதன் அடைப்படையில்  வாக்களித்ததில்லை.

“ஊழல் பற்றி அதிகமாக புகார் செய்யும் ஒருவர், தனக்கு ஒரு சம்மன் வந்தால் போதும் போலீஸ் அதிகாரியுடன் பேசி சமசரசம் செய்துகொள்வதில் முதல் ஆளாக நிற்பார்”.

1brim chinஅரசியல் வலைப்பதிவர்கள் 2008-இல் ஏற்படுத்தியதைப் போன்றதொரு தாக்கத்தை வரும் தேர்தலில் ஏற்படுத்துவார்கள் என்று சொல்லவியலாது என்று சின் (இடம்) கூறினார்.

மக்கள் இப்போது வலைப்பதிவர்களின் அரசியல் பின்னணியைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள்.

“அரசியல் வலைப்பதிவர்கள் அவர்களின் ஆதரவாளர்களுடன் எது வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், புதியவர்களை நம்ப வைக்க முடியாது”.

கருத்தரங்கில் கலந்துகொண்டவர்களின் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த சின், இவ்வாண்டுத் தேர்தல் “சுதந்திரமாகவும் நியாயமாகவும்” நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் துணிச்சலான கருத்தொன்றைக் குறிப்பிட்டார்.

“மலேசியாவில் 1955 தொடக்கம் சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடந்ததில்லை”, என்றாரவர்.

மெர்டேகா மையத்தின் கணக்கெடுப்பின்படி 2008 தேர்தலுக்குப்பின் 3.27 மில்லியன் புதிய வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.  அந்த வகையில், எதிர்வரும் தேர்தலில் வாக்களிப்போரில் 25 விழுக்காட்டினர் முதன் முறையாக வாக்களிப்போராக இருப்பார்கள்.

இவர்களும் மதில்மேல் பூனை வாக்காளர்களும்தான் வரும்  தேர்தலில் முடிவுகளைத் தீர்மானிப்பவர்களாக இருப்பார்கள்போல் தெரிகிறது.