அப்பாவித் தமிழர்களை கொன்ற கொலைகாரனுக்கு மலேசியா உடந்தையாவதா?

ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மலேசியா முன்மொழிந்து ஆதரவளிக்க வேண்டும் என போராட்டங்கள், கோரிக்கை மனுக்கள் என பல வழிகளிலும் நமது அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டபோதும், அது வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கிக்கொண்டுள்ளது.

இச் செயலானது இந்நாட்டில் வாழும் தமிழர்களுடைய உணர்வுக்களுக்கு மலேசியா அரசாங்கம் மதிப்பளிக்கவில்லை என்பதையே வெளிக்காட்டுவதாக கூறுகிறார் சிலாங்கூர் நடவடிக்கை குழுத் தலைவர் எல். சேகரன்.

இந்நாட்டு குடிமக்களாகிய 18 இலட்சம் மலேசியத் தமிழர்களுடைய கோரிக்கைகளை ஒரு பொருட்டாக கருதாமல் இலங்கையில் செய்துள்ள அற்ப முதலீடுகளுக்காக , ஒரு இனத்தையே படுகொலை செய்த அரசாங்கத்தை கண்டிக்கத் தவறிய மலேசிய அரசாங்கத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

அமெரிக்கா கொண்டுவந்துள்ள இத்தீர்மானத்தின் மூலம் தமிழர்களுக்கு அதிகப்படியான நன்மை கிடைக்காவிடினும், அப்பட்டமாக ஒரு இனப்படுகொலையை புரிந்துள்ள சிங்கள அரசுக்கு எதிரன தீர்மானத்திற்கு ஆதரவு கொடுக்காமல், மலேசியா அரசாங்கம் விலகிக்கொண்டதிலிருந்து, மலேசியா மனித உரிமைகளை மதிக்கும் நாடு என்ற தோற்றத்தை இழந்துள்ளதாக சேகரன் சுட்டிக்காட்டினார்.

segaran_SATகடந்த தடவையும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது நழுவிக் கொண்ட மலேசியா அரசாங்கம், இம்முறை மலேசியத் தமிழர்கள் வழங்கிய கோரிக்கைகளுக்கு இணங்க, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதாரிக்கும் என எதிர்பார்த்தபோதும் கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது.

இலங்கையில் அப்பாவித் தமிழர்களை கொன்ற கொலைகாரனுடன் தொடர்ந்து நட்புறவாடுவதற்காக, நம்பியிருந்த நாட்டு மக்களுக்கே நம்பிக்கை துரோகம் இழைத்துள்ள தற்போதைய அரசாங்கம், அதற்கான பலனை வருகின்ற பொதுத் தேர்தலின் போது நிச்சயம் பெற்றுகொள்ளும் என நாடுகடந்த தமிழீழ அரசின் கிள்ளான் தோழமை மையத்தின் ஒருங்கிணைப்பாளருமான எல்.சேகரன் தெரிவித்தார்.

வருகின்ற பொதுத்தேர்தலின் பின்னர் ஆட்சியை கைப்பற்றப்போகும் புதிய அரசாங்கம், இலங்கையில் இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை புறகணிப்பதுடன், இலங்கை மீது பொருளாதார தடையை கொண்டுவருவதற்கு வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்ட எல். சேகரன், அதற்கான அழுத்தங்களை கொடுப்பதற்காக இந்நாட்டில் வாழும் தமிழர்கள் அனைவரும் தொடர்ந்து போராட முன்வரவேண்டும் என்றார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் 13 அதிகப்படியான வாக்குகளால் நேற்று நிறைவேறியது. 47 நாடுகளை உறுப்பினராக கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் 26 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாகவும் 13 நாடுகள் எதிராகவும் வாக்களிக்க 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது நடுநிலையும் வகித்திருந்தன.

இலங்கையில் சிங்கள அரசாங்கம் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட கொடூர வன்முறை இன அழிப்பு தொடர்பாக வெளிவந்த பல ஆதாரங்கள், அனைத்துலகத்தையே கலக்கமடையச் செய்தது. அதன்தாக்கம், இலங்கை மீது பல நாடுகளின் அழுத்தத்தை பிரயோகிக்க செய்ததது என்பது குறிப்பிடத்தக்கது.