அன்வாருடைய தோற்றத்தைக் கெடுப்பதற்காக ஜோகூர் பாருவில் பதாதைகள்

anwarமுத்தமிட்டுக் கொள்ளும் ஆடவர்களைக் காட்டும் இரண்டு பதாதைகள் ஜோகூர் பாரு குடியிருப்புப் பகுதி  ஒன்றில் திடீரென தொங்க விடப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்பு பிகேஆர் மூத்த  தலைவர் அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்ட செராமா நிகழ்வு ஆயிரக்கணக்கான மக்களைக் கவர்ந்தது  என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தாமான் மெகா ரியாவில் நேற்று காலை அந்த இரண்டு பதாதைகளையும் கட்சி உறுப்பினர்கள் பார்த்ததாக
ஜோகூர் ஜெயா பிகேஆர் கிளைத் தலைவர் ஜிம்மி புவா மலேசியாகினியிடம் கூறினார்.

அன்வார் நாளை ஜோகூர் பாருவுக்கு செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர் நாளை இரவு செராமா
ஒன்றில் ஜோகூர் பாரு நாடாளுமன்றத் தொகுதிக்கான பிகேஆர் வேட்பாளரை அறிவிப்பார் என
எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்தப் பதாதைகளை அச்சிட்டவர் யார் என்பதும் அதற்கு யார் பொறுப்பானவர்கள் என்பதும் அவற்றில்
குறிப்பிடப்படவில்லை. அந்தப் பதாதைகளில் ஊராட்சி மன்ற அனுமதி முத்திரையும் காணப்படவில்லை.

anwar1ஒரே மாதிரியான அந்த இரண்டு பதாதைகளில் உள்ளவர்கள் யாரும் அடையாளம் கூறப்படவில்லை. என்றாலும் ‘இறைவன் பரிசுக்கும் ஹுகுவான் சியாவ்-வுக்கும் வரவேற்கிறோம்’ என அர்த்தம் கொடுக்கும் வாசகங்கள் மலாய் மொழியில் அவற்றில் எழுதப்பட்டிருந்தன. அந்தப் பதாதைகளில் உள்ள ஒருவர் அன்வார் என்ற தோற்றத்தை அந்த வாசகங்கள் தந்தன.

அன்வார் கடந்த மாதம் சபாவுக்குச் சென்றிருந்த போது அவருக்கு ஆதரவாளர்கள் ஹுகுவான் சியாவ் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார்கள். கடாஸான் சமூகத்தின் மூத்த தலைவருக்கு அந்தப் பட்டம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் தமக்கு அந்தப் பட்டம் கொடுக்கப்படவில்லை என அன்வார் பின்னர்
மறுத்தார்.

2010ம் ஆண்டு பிகேஆர் தேசிய மாநாட்டின் போது அந்த எதிர்த்தரப்புத் தலைவரை அவரது மனைவியும்
பிகேஆர் தலைவருமான டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயில் ‘இறைவன் பரிசு’ என வருணித்துள்ளார்.

அந்தப் பதாதையின் படங்களை பாப்பாகோமோ உட்பட அம்னோ சார்பு வலைப்பதிவாளர்கள் இணையத்தில்
சேர்த்துள்ளனர். பாப்பாகோமோவுக்கு எதிராக அன்வார் இப்போது அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

திங்கட்கிழமை இரவு தாமான் மெகா ரியாவில் நிகழ்ந்த செராமாவில் அன்வார் ஆயிரக்கணக்கான மக்களைக்
கவர்ந்ததைத் தொடர்ந்து அவருடைய தோற்றத்தைக் கெடுப்பதற்காக இரு பதாதைகளும் வைக்கப்பட்டிருக்கலாம்  என புவா மலேசியாகினியிடம் கூறினார்.

பிகேஆர் உறுப்பினர்கள் அந்தப் பதாதைகளை அகற்றியதுடன் போலீசிலும் புகார் செய்துள்ளனர்.