பிஎஸ்எம் ஆர்வலர்கள் விடுவிக்கப்பட்டனர், ஆனால் விடுதலை செய்யப்படவில்லை

மலேசிய சோசலிசக் கட்சியின் 24 ஆர்வலர்களை பட்டர்வொர்த் செசன்ஸ் நீதிமன்றம் இன்று விடுவித்தது ஆனால் விடுதலை செய்யவில்லை.

இவர்கள் அனைவரும் இசா சட்டம் மற்றும் சமுதாய மன்றங்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.

இவர்களுடன் சேர்த்து குற்றம் சாட்டப்பட்டிருந்த இன்னும் அறுவர் மீதான தீர்ப்பு அக்டோபர் 28 க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இன்று நீதிமன்றத்திற்கு வரவில்லை.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் எடுத்துக்கொண்ட பின்னர் நீதிபதி இக்மால் ஹிசான் முகமட் தஜுடின் இத்தீர்ப்பை வழங்கினார்.

முன்னதாக அரசு தரப்பு வழக்குரைஞர் இவர்களை விடுதலை செய்யாமல் விடுவிக்குமாறு பரிந்துரைத்தார், ஏனென்றால் பெர்சே 2.0 ஒரு சட்டவிரோத அமைப்பு என்பது பற்றிய வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது என்று அவர் கூறினார்.

அடுத்த மாதம் இசா சட்டத்தை அரசாங்கம் ரத்து செய்யும் திட்டமும் தமது பரிந்துரைக்கான காரணம் என்று அவர் தெரிவித்தார்.

தற்காப்பு வழக்குரைஞர் கே. பிரபாகரன் குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்த 30 பேரும் அவர்கள் கைது செய்யப்பட்ட ஜூன் 25 இல் எந்தக் குற்றமும் செய்யவில்லை ஏனென்றால் ஜூலை 1 இல்தான் பெர்சே 2.0 சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்டது. ஆகவே, குற்றச்சாட்டுகள் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

“குற்றச்சாட்டுகள் என்னாவது?”

நீதிமன்றத்திற்கு வெளியில், இந்த தீர்ப்பில் ஆச்சரியம் ஒன்றுமில்லை என்று மலேசிய சோசலிசக் கட்சியின் பொதுச்செயலாளர் எஸ். அருள்செல்வன் கூறினார்.

இசா சட்டம் ரத்து செய்யப்படும் என்று நஜிப் அறிவித்த பின்னர் பெர்சே 2.0 சம்பந்தப்பட்ட இதர வழக்குகளை அரசாங்கம் கைவிட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

இன்றைய வாதம் ஒன்றுதான். விடுவிக்கப்படுவது முழுமையான விடுதலையா என்பதுதான் என்றாரவர். இன்று நடந்தது மானத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்கான வழியாகும். போலீசார் எங்கள் ஆர்வலர்களை சட்டவிரோதமாக கைது செய்துள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.
“எங்கள் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: (மாமன்னருக்கு) எதிராகப் போர் தொடுத்தோம், பெர்சே 2.0 (பேரணி) ஏற்பாட்டாளர்களாக செயல்பட்டோம், வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து கம்யூனிசத்திற்கு புத்துயிர் அளிக்க முயற்சித்தோம்”, என்று அருள்செல்வம் கூறினார்.

“நாங்கள் ஆயுதங்கள் வைத்திருந்தோம், எங்களுடைய ஆதரவாளர்கள் போலீஸ் நிலையத்தில் குண்டு வைத்தனர் என்றெல்லாம் எங்களுக்கு எதிராகக் குற்றம் சாட்டப்பட்டன…இன்று இவை அனைத்தும் பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளன.”

போலீசாரின் அதிகார அத்துமீறல்களுக்கு, ஜூன் மாததில் கப்பளா பத்தாஸ் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிஎஸ்எம் பெண் உறுப்பினர்களிடம் முறைகேடாக நடந்து கொண்டது உட்பட, பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.