ஜோகூர் பிகேஆர் தலைவர் சுவா ஜுய் மெங், கேளாங் பாத்தா-வில் டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங் களமிறக்கப்படுவதால் ஆத்திரத்துடன் இருக்கிறார் என்று கூறப்பட்டாலும் அம்மாநிலத்தில் கட்சியின் தேர்தல் பணிகளை எல்லாம் அவர்தாம் முன்னின்று கவனித்துக்கொள்வதாக தெரிகிறது.
பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் கேளாங் பாத்தாவை டிஏபி-க்கு விட்டுக் கொடுத்தது முன்னாள் மசீச தலைவரும் அமைச்சருமான சுவாவுக்குப் பிடிக்கவில்லைதான். ஆனால், அதற்காக அவர் கட்சியைவிட்டு விலகப்போவதில்லை என்று பிகேஆர் தலைவர்கள் மலேசியாகினியிடம் தெரிவித்தனர்.
“இப்போதைக்கு அவர் பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. ஆனால், கட்சி வேலைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன”, என்று ஜோகூர் பிகேஆர் தேர்தல். இயக்குனர் ஸ்டீபன் சூங் கூறினார்.
கேளாங் பாத்தா-வில் லிம் களமிறக்கப்படுவார் என்று அறிவிக்கப்படுவதற்குமுன் அத்தொகுதி யாருக்கு என்ற விசயத்தில் சுவாவும் ஜோகூர் டிஏபி தலைவர் டாக்டர் பூ செங் ஹாவும் ஓயாது சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.
கேளாங் பாத்தாவில் லிம் கிட் சியாங் போட்டியிடுவார் என்று அன்வார் அறிவித்ததால் அதிருப்தி கொண்ட சுவா, விடுப்பு எடுத்துக்கொண்டு கட்சிப் பணிகளிலிருந்து ஒதுங்கி இருப்பார் என்றும் கட்சியைவிட்டே விலகுவார் என்றும் கட்சிக்குள் பேசிக்கொள்ளப்படுதாக சீனமொழி நாளேடுகளில் ஒரு வாரமாக வதந்திகள் உலவிக் கொண்டிருக்கின்றன.
ஆனால், பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா, அந்த வதந்திகளில் “உண்மை இல்லை” என்கிறார்.
சுவா அதிருப்தி அடைந்திருப்பதால் மாநில அளவில் ஏதேனும் பிரச்னைகள் உண்டா என்று வினவியதற்கு, “அவையெல்லாம் தீர்க்கப்பட்டு விடும்”, என்றார்.
அவரைப் போலவே இன்னொரு பிகேஆர் உதவித் தலைவரான என். சுரேந்திரனும், சுவா பக்காத்தானின் போராட்டத்தில் தம்மை முழுமையாக இணைத்துக்கொண்டிருக்கிறார் என்றும் ஆளும்கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் ஜோகூரில் பிஎன்னை ஆட்சியிலிருந்து அகற்ற அவர் பெரிதும் துணையாக இருப்பார் என்றும் சொன்னார்.
சுவாவுக்கு செகாமாட்டா, பக்ரியா, மூவாரா?
கேளாங் பாத்தா லிம்முக்கு என்றாகி விட்டதால் சுவா, அடுத்துள்ள மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளில்-செகாமாட், பக்ரி, மூவார் ஆகிய மூன்றில்- ஏதாவது ஒன்றில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செகாமாட்டில் அவர் போட்டியிடும் வாய்ப்பு நிறையவே உள்ளது. அத்தொகுதி பிகேஆருக்கே என பிகேஆரும் டிஏபி-யும் ஏற்கனவே பேசி முடிவு செய்துள்ளன. இப்போது அத்தொகுதியின் எம்பி மஇகாவின் டாக்டர் எஸ். சுப்ரமணியம். கடந்த தேர்தலில் அத்தொகுதியில் டிஏபி போட்டியிட்டது. ஆனால், தோற்றது.
சுப்ரமணியம் 2,991 வாக்குகள் பெரும்பான்மையில் வென்றார். அது பல இனங்களைக் கொண்ட தொகுதி. ஆனால், அங்கு சீன வாக்காளர் எண்ணிக்கை 47 விழுக்காடு என்பதால் அதை வெல்ல முடியும் என்று பிகேஆர் நம்புகிறது.
இப்போது டிஏபி வசமுள்ள பக்ரி-யும் சுவா போட்டியிடுவதற்குப் பொருத்தமான ஒரு தொகுதிதான். ஏனென்றால், சுவா மசீச-வில் இருந்தபோது 22 ஆண்டுகள் அத்தொகுதியின் எம்பி ஆக இருந்திருக்கிறார். 2008-இல் அவர் போட்டியிடவில்லை.
மூவாரும் அவர் போட்டியிடுவதற்கு ஏற்ற ஒரு தொகுதிதான். சுவாவுக்கு அங்கும் செல்வாக்கு உண்டு எனத் தெரிகிறது. அது ஏற்கனவே பிகேஆர் போட்டியிட்ட ஒரு தொகுதிதான். ஆனால், அது மலாய் வாக்காளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு தொகுதி என்பதால் அங்கு மலாய் வேட்பாளர்கள் களமிறக்கப்படுவதுதான் வழக்கம்.
அங்கு 2008 தேர்தலில், அம்னோவின் ரசாலி இப்ராகிம், பிகேஆரின் நா புடினை 4,661 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடித்தார். அங்கு மலாய்க்கார வாக்காளர்கள் 62 விழுக்காடு, சீனர்கள் 36 விழுக்காடு, இந்தியர்கள் 1 விழுக்காடு.
ஜோகூரில் எல்லாம் நன்றாக இருக்கிறதா என்பது இன்றிரவு அன்வார் ஜோகூர் பாரு செல்லும்போது தெரிந்துவிடும். அங்கு அவர் ஜோகூர் பாரு பக்காத்தான் வேட்பாளரை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அன்வார் திங்கள்கிழமை கேளாங் பாத்தா வேட்பாளராக லிம்மை அறிவித்த நிகழ்வுக்கு சுவா செல்லவில்லை. இன்றைய நிகழ்வுக்கு அவர் செல்வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.