பிகேஆர் இளைஞர் பகுதியினர், தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியத்தின் இரண்டாவது சத்திய பிரமாணம் தொடர்பில் கடந்த வாரம் வழக்குரைஞர் மன்ற ஆண்டுக்கூட்டத்தில் வழக்குரைஞர் அமெரிக் சித்து தெரிவித்த புதிய தகவலை அடிப்படையாக வைத்து அல்டான்துயா கொலையை மறுவிசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நேற்று போலீசில் பதிவு செய்தனர்.
டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் தங்கள் கோரிக்கையைப் பதிவுசெய்த பிகேஆர் இளைஞர் தலைவர் ஷம்சுல் இஸ்கண்டர் முகம்மட் அகின் (வலம்), போலீசார் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், கம்பள வியாபாரி தீபக் ஜெய்கிஷன், மூத்த வழக்குரைஞர் சிசில் எப்ரேஹம் ஆகியோருடம் வாக்குமூலங்கள் வாங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
“சிசில் எம்ரேஹமுக்கு ஒரு மகஜர் அனுப்பி அவருக்கு நஜிப்பின் உத்தரவு என்ன என்று விளக்கம் கேட்கப் போகிறேன்.
“போலீசார் மறுவிசாரணை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். 66வது வழக்குரைஞர் மன்ற ஆண்டுக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட தகவலை அடிப்படையாக வைத்து அவர்கள் விசாரணையைத் தொடங்கலாம்”, என்றார்.
அக்கூட்டத்தில் அமெரிக், நஜிப்பின் உத்தரவின்பேரில் சிசில் பாலசுப்ரமணியத்துக்கு இரண்டாவது சத்திய பிரமாணத்தைத் தயாரித்துக் கொடுத்ததாக தெரிவித்தார்.
இதே விவகாரம் தொடர்பில், என்ஜிஓ ஒன்று, மங்கோலிய பெண்ணின் கொலைமீது மறுவிசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் மகஜர் ஒன்றை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸிடம் (ஐஜிபி) வழங்கியது.
நீதிக்காக ஜிஹாட் என்ற அமைப்பின் தலைவர் தஸ்லிம் முகம்மட் இப்ராகிம், நேற்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் டிஎஸ்பி அனுவல் அப் வகாப்பிடம் அந்த மகஜரை ஒப்படைத்தார்.
இதே விவகாரம் தொடர்பில் பிப்ரவரி 21-இல் ஐஜிபிக்குக் கடிதம் எழுதியதாகவும் அதற்கு இதுவரை பதில் இல்லை என்றும் தஸ்லிம் (படத்தில் இடமிருந்து இரண்டாவது இடத்தில் இருப்பவர்) கூறினார்.
பாலசுப்ரமணியம் இந்தியாவிலிருந்து திரும்பியதும் கோலாலும்பூரில் ஒரு கருத்தரங்கில் அவரைச் சந்தித்துப் பேசியதாகவும். அப்போது அவர் சொன்னதைக் கேட்டு நஜிப்புக்கு அல்டான்துன்யா கொலையில் தொடர்புண்டு என்று முதலாவது சத்திய பிரமாணத்தில் அவர் குறிப்பிட்டது உண்மைதான் என்று உணர்ந்ததாகவும் தஸ்லிம் கூறினார்.
“பாலாவின் எதிர்பாராத மரணம் அதிர்ச்சியாக இருந்தது”, என்றாரவர்.
பாலசுப்ரமணியத்தையும் அவரைப் போலவே கொலை தொடர்பாக அதேபோன்ற குற்றச்சாட்டை முன்வைத்த தீபக்கையும் நஜிப் நீதிமன்றத்துக்கு இழுப்பார் என்று தஸ்லிம் எதிர்பார்த்தார்.
“அது நடக்கவில்லை. அதனாலேயே வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும் என்ற எண்ணமும் உறுதிப்பட்டது”, என்றாரவர்.
இவ்விவகாரத்தில் முழு உண்மையும் வெளிச்சத்துக்கு வர வேண்டும். அதை மூடிமறைக்க முயன்ற அனைவரும், போலீஸ் அதிகாரிகள் உள்பட, அடையாளம் காணப்பட வேண்டும் என்றவர் கூறினார்.
அவர் மகஜரை ஒப்படைத்தபோது பிகேஆர் உதவித் தலைவர் ஆர்.சிவராசா, பிகேஆர் மனித உரிமை சட்ட விவகாரப் பிரிவு துணைத் தலைவர் எஸ்.ஜெயதாஸ் ஆகியோரும் உடன் இருந்தனர்.
அல்டான்துன்யா, 2006, அக்டோபர் 18-இல் கொல்லப்பட்டார்.