கிட் சியாங்: பாஸ் சின்னத்தின் கீழ் நான் போட்டியிடலாம்

pakatகடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்த டிஏபி கட்சித் தேர்தல்களில் நிகழ்ந்த குளறுபடிக்காக அந்தக் கட்சியின்  பதிவை சங்கப் பதிவதிகாரி ரத்துச் செய்தால் தாம் வரும் தேர்தலில் பாஸ் சின்னத்தின் கீழ் போட்டியிடலாம்  என டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறியிருக்கிறார்.

சங்கப் பதிவதிகாரி டிஏபி-யை ரத்துச் செய்வதற்கு காரணம் இல்லை என்றாலும் தேர்தல்களில் அந்தக் கட்சி
தனது சின்னத்தின் கீழ் போட்டியிடுவதைத் தடுக்கும் சதித் திட்டம் வகுக்கப்பட்டிருக்கலாம் என அவர் கவலை
அடைந்துள்ளார்.

“அது நிகழ்ந்தால் டிஏபி வேட்பாளர்கள் சுயேச்சைகளாக அல்லது பாஸ் அல்லது பிகேஆர் சின்னங்களின் கீழ்
நிறுத்தப்படலாம்.”

“பிஎன் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி டிஏபி பதிவை ரத்துச் செய்தால் நான் 13வது பொதுத் தேர்தலில்
பக்காத்தான் ராக்யாட் ஒற்றுமையை வலுப்படுத்த பாஸ் சின்னத்தை பயன்படுத்தக் கூடும்,” என அவர் இன்று
தமது டிவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார்.pakat1

புதிய கட்சித் தேர்தல்களை நடத்த டிஏபி மறுப்பதால் சங்கப்பதிவதிகாரி அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் டிஏபி உதவித் தலைவர் துங்கு அப்துல் அஜிஸ் துங்கு இப்ராஹிம் விடுத்துள்ள  வேண்டுகோள் பற்றி லிம் கருத்துரைத்தார்.

கட்சித் தேர்தல்களில் வாக்குகளை எண்ணும் போது தவறு நிகழ்ந்து விட்டதை ஜனவரி 3ம் தேதி டிஏபி ஒப்புக்  கொண்டு மீண்டும் வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து சங்கப்பதிவதிகாரி அலுவலகம் அதன் மீது விசாரணையைத் தொடங்கியது.

இதனிடையே சில டிஏபி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஒத்துழைக்க மறுப்பதால் அந்த அலுவலகம்
விசாரணையில் பிரச்னைகளை எதிர்நோக்குவதாக இன்று உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.

pakat2“அறிக்கை வழங்குமாறு நாங்கள் டிஏபி தலைவர் ஒருவருக்கு கடிதம் அனுப்பினோம், ஆனால் அந்த நபர்
இன்னும் வரவில்லை. நேரம் இல்லை என அவர் காரணம் சொல்கிறார்,” என சங்கப்பதிவதிகாரி அலுவலக
தலைமை இயக்குநர் அப்துல் ரஹ்மான் ஒஸ்மான் சொன்னதாக அந்தச் செய்தி குறிப்பிட்டது.

டிஏபி கட்சியின் பதிவை ரத்துச் செய்வது நடவடிக்கைகளில் ஒன்றாக இருக்கலாம் எனக் குறிப்பிட்ட அவர்
விசாரணைகள் முடிந்த பின்னரே அது செய்யப்படும் என வலியுறுத்தினார்.

“சங்கப் பதிவதிகாரி அலுவலகம் சட்டத்தை மதிக்கிறது. சட்ட விதிகளுக்கு ஏற்ப நாங்கள் செயல்படுவோம்.
நெருக்குதலுக்கு நாங்கள் பணிய மாட்டோம். விசாரணை இன்னும் வெகு தொலைவு செல்ல வேண்டியுள்ளது,”  என்றார் அவர்.

 

TAGS: