பக்காத்தான்: அடையாளக் கார்டு திட்டத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

pakatanபக்காத்தான் ராக்யாட் தனது தேர்தல் கொள்கை அறிக்கையின் சபா பதிப்பை நேற்று வெளியிட்டது. சபா   கள்ளக் குடியேறிகள் மீது தற்போது அமைக்கப்பட்டுள்ள அரச விசாரணை ஆணையத்தை ( ஆர்சிஐ)  காட்டிலும் முழுமையான ஆர்சிஐ-யை அமைப்பதாக அதில் பக்காத்தான் வாக்குறுதி அளித்துள்ளது.

“குடியுரிமை விவகாரத்தை தூய்மைப்படுத்துவதோடு தகுதி பெற்றவர்களுக்கு குடியுரிமை கிடைப்பதற்கான
பாதையும் வகுக்கப்படும். அத்துடன் அந்த அடையாளக் கார்டு திட்டத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட
நடவடிக்கையும் எடுக்கப்படும்,” என அந்த கொள்கை அறிக்கை குறிப்பிட்டது.

‘வாக்குகளுக்காக குடியுரிமை’ எனக் கூறப்படும் அந்த அடையாளக் கார்டு திட்டம் (மகாதீர் திட்டம்) என்று
கூறப்படும் அந்த நடவடிக்கை சபாவில் 1980 -களில் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமைக்கப்பட்ட ஆர்சிஐ அந்த விஷயம் மீது இப்போது விசாரணை நடத்தி
வருகின்றது.

அடையாளக் கார்டு திட்டத்திற்கு பொறுப்பானவர்களை அடையாளம் காணவும் தண்டனை வழங்கவும்
பிரச்னைக்குத் தீர்வு காணவும் அந்த ஆர்சிஐ-க்கு அதிகாரம் கொடுக்கப்படவில்லை என பல தரப்புக்கள் புகார்
செய்துள்ளன.

பக்காத்தான் ராக்யாட் சபா மக்களுக்கு வெளியிட்டுள்ள தேர்தல் கொள்கை அறிக்கையில் 40 வாக்குறுதிகள்
இடம் பெற்றுள்ளன. ஏற்கனவே பிப்ரவரி 25ம் தேதி பக்காத்தானின் முக்கிய தேர்தல் கொள்கை அறிக்கை
வெளியிடப்பட்டுள்ளது.

சபாவுக்கு சுயாட்சி உரிமை வழங்குவது, மக்களவையில் சபாவுக்கு நியாயமான பிரதிநிதித்துவம் கிடைக்கும்
வகையில் தேர்தல் தொகுதி எல்லைகளைத் திருத்துவது, எண்ணெய் உரிமப் பணத்தை அதிகரிப்பது, சுதேசி
பாரம்பரிய நில உரிமைகளை அங்கீகரிப்பது ஆகியவை மற்ற வாக்குறுதிகளில் அடங்கும்.