பினாங்கு பிஎன் இளைஞர் பிரிவு: ‘பினாங்கு சாலை-சுரங்கப் பாதை திட்ட செலவுகள் 2 பில்லியன் ரிங்கிட் கூடியது ஏன்?’

LGEபினாங்குத் தீவுக்கும் தலை நிலத்துக்கும் இடையிலான சுரங்கப் பாதை உட்பட ஒருங்கிணைந்த சாலைத்  திட்டத்துக்கான செலவுகள் 2.22 பில்லியன் ரிங்கிட் ‘அதிகரித்துள்ளது’ குறித்து பினாங்கு பிஎன் இளைஞர் பிரிவு  அதிர்ச்சி அடைந்துள்ளது.

அந்தத் திட்டத்துக்கு மொத்தம் 6.3 பில்லியன் ரிங்கிட் செலவாகும் எனக் கூறியுள்ள முதலமைச்சர் லிம் குவான்  எங் அதனை மேலும் விளக்க வேண்டும் என்று அதன் தகவல் பிரிவுத் தலைவர் இங் கூன் லெங் கேட்டுக்  கொண்டார்.

LGE1அந்தத் திட்டத்துக்கு 4.08 பில்லியன் ரிங்கிட் செலவாகும் என முதலமைச்சர் 2011ம் ஆண்டு அறிவித்திருந்ததைச் சுட்டிக் காட்டிய அவர், அந்தக் கூடுதல் தொகை “லிம்-முக்கும் அவரது நிர்வாகத்துக்கும் கொடுக்கப்படும் தரகுப் பணமா ?” என வினவினார்.

“அவர் விளக்கத் தவறினால் நிறுவனங்களுக்கும் லிம் உட்பட தனிநபர்களுக்கும் தரகுப் பணம் கொடுக்கப்பட்டதாக நாங்கள் கருதுவோம்,” என இங் நேற்று நிருபர்களிடம் கூறினார்.

2025ம் ஆண்டு நிறைவடையும் அந்தத் திட்டம் 6.5 கிலோமீட்டர் நீளத்துக்கு பினாங்கு பட்டர்வொர்த் கடலடி சுரங்கப் பாதையையும் உள்ளடக்கியுள்ளது. அதற்கான குத்தகை Consortium Zenith BUCG Sdn Bhd-க்கு வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 4.5 பில்லியன் ரிங்கிட் செலுத்தப்பட்ட மூலதனத்துடன் நான்கு நிறுவனங்கள் அதனை அமைத்துள்ளன.

அந்தத் திட்டம் மீது கூறப்படும் குறைபாடுகளை நிராகரித்த லிம் அது மக்களுக்கு நன்மை அளிக்கும் என்றார்.