நெகிரி செம்பிலானில் சட்டமன்றம் கலைவதை அடுத்து போட்டி வலுக்கிறது

1nsதேர்தல் கண்ணோட்டம்

நெகிரி செம்பிலான் சட்டமன்றம் இன்று நள்ளிரவில் தானே கலைந்துவிடும். அதன்பின் 60 நாள்களில் அங்கு தேர்தல் நடக்க வேண்டும். அந்தத் தேர்தலில் வென்று சட்டமன்றத்தைக் கைப்பற்றப்போவது யார் என்றறிவதில் அனைவரும் ஆவலாக உள்ளனர்.

1ns1பிஎன், பக்காத்தான் ரக்யாட் இரண்டுமே மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கின்றன. எனவே, அங்கு யார் வெல்வார், யார் வீழ்வார் என்பதைக் கணிக்க ஆய்வாளர்களே சிரமப்படுகிறார்கள்.

36 பேரைக் கொண்ட சட்டமன்றத்தில் 2004-இல் பக்காத்தானிடம் இருந்தவை இரண்டே இரண்டு இடங்கள்தான் -லொபாக்கும் பாஹாவும். ஆனால், 2008-இல் 15 இடங்களை அது கைப்பற்றியது. இதன்வழி ஆளும்கட்சி சட்டமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை இழந்தது. இன்னும் சில இடங்கள் கிடைத்திருந்தால் ஆட்சியே மாறி இருக்கும்.

பிஎன்னிடம் இருப்பவை 21 இடங்கள். நான்கு இடங்கள் கைமாறி இருந்தால் நெகிரி செம்பிலானில் புதிய அரசாங்கமே அமைந்திருக்கும்.

பக்காத்தானிடமுள்ள 15 இடங்களில் டிஏபி 10 இடங்களை வைத்துள்ளது. பிகேஆரிடம் நான்கு. பாஸிடம் ஒரே ஒரு இடம்.

ஐந்தாண்டுகளுக்குமுன் பக்காத்தானிடம் இருந்த வேகம் இன்னமும் இருக்கிறதா?  மேலும் நான்கு இடங்களைக் கைப்பற்றி மாநில அரசாங்கத்தை அமைக்கும் ஆற்றல் அதற்கு உண்டா?

விளிம்புநிலை இடங்கள்மீது குறி

பக்காத்தான், கடந்த தேர்தலில், குறுகிய பெரும்பான்மையில் பிஎன் வெற்றிபெற்ற இடங்களைக் குறிவைத்து செயல்படுவதாக தெரிகிறது.

பிஎன்னின் 21 இடங்களில் எட்டு, ஆயிரம் சொச்சம் வாக்கு வேறுபாட்டில் கைமாறியவை என்பதால் அந்த இடங்களைக் கைப்பற்ற முடியும் என்றே பக்காத்தான் நம்புகிறது.

எடுத்துக்காட்டுக்கு கிளாவாங் தொகுதியில் 841 வாக்குகள் பெரும்பான்மையில்தான் பிஎன் வெற்றி பெற்றது. பிலாவில் 1,258 வாக்குகள் பெரும்பான்மை. லெங்கெங்கில் 1.285, ஜொஹோலில் 1,263, லாபுவில் 1,405.

லிங்கி (1,575), ஜெராம் பாடாங் (1,808) ஆகிய இடங்களில் பின் வெற்றி பெற்றது என்றாலும் 2004-இல் அது பெற்ற பெரும்பான்மை பாதியாகக் குறைந்தது.

1ns lokeபக்காத்தான் குறைந்தபட்ச நான்கு இடங்களுக்கு மட்டுமல்ல அதற்கும் கூடுதலான இடங்களுக்குக் குறி வைக்கிறது.

“19 இடங்கள் சாதாரண பெரும்பான்மையைக் கொடுக்கும். ஆனால், 20 இடங்களை இலக்காகக் கொண்டிருக்கிறோம்”, என்று மாநில டிஏபி தலைவர் அந்தோனி லோக் கூறுகிறார்

லொபாக்கில், 6,928-வாக்குப் பெரும்பான்மையில் வெற்றிபெற்ற லோக் (வலம்) வரும் தேர்தலில் சென்னா தொகுதிக்கு மாறிச் செல்வார் எனத் தெரிகிறது. அங்கு அவர் கடும் போட்டியை எதிர்நோக்குவார். ஏனென்றால் அது 1,928 வாக்குகளில் பிஎன் வெற்றிபெற்ற இடமாகும்.

பக்காத்தானிடம் உள்ள நம்பிக்கை பிஎன்னிடம் இருக்கிறது. பக்காத்தானிடமுள்ள 15 இடங்களில் எட்டைக் கைப்பற்ற அது எண்ணம் கொண்டிருப்பதாக மந்திரி புசார் முகம்மட் ஹசான் கூறுகிறார்.

அம்பாங்கான் (165-வாக்குப் பெரும்பான்மை), சிக்காமாட் (499), ரெபா (533), போர்ட் டிக்சன் (733), பாரோய் (1,107), தெமியாங் (1,338), நீலாய் (1,894) முதலிய இடங்களை அது குறி வைத்துள்ளது.

எட்டு இடங்களில் நான்கு ரெபா, அம்பாங்கான், போர்ட் டிக்சன், சிக்காமார் ஆகியவை ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகளில் பக்காத்தான் வென்றவையாகும்.

ஆளுமைகளின் பரிமாணம்

1ns breakdownரந்தாவ் சட்டமன்ற உறுப்பினரான முகம்மட் கூறுவதைப் பார்த்தால், பிஎன் 36 இடங்களில் 29-ஐக் கைப்பற்றி சட்டமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை மீண்டும் பெறும்.

மலாயாப் பல்கலைக்கழகத்தின் ஜனநாயக, தேர்தல் மைய (யுஎம்சிடெல்) இயக்குனர் முகம்மட் ரிட்சுவான் ஒத்மான், தேர்தல் முடிவு எப்படியும் அமையலாம் என்கிறார்.

“பிஎன் நிறைய முன்னேற்பாடுகளைச் செய்துள்ளது. அவர்கள் வழங்கிய அன்பளிப்புகள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள பல பெல்டா திட்டங்கள் பிஎன்னுக்கு வைப்புத்தொகைகள் போல.

“பக்காத்தானுக்கு, சீனர்களின் ஆதரவு குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது”, என்றாரவர்.

1ns sharizatஇரு தரப்பும் வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில் ‘ஆளுமைகளின் பரிமாணத்தை’ அளவிடுவதற்கில்லை என்றவர் சொன்னார்.

அங்கு தேர்தலில் உள்ளூர் விவகாரங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த மாட்டா என்றும் தேசிய விவகாரங்களின் தாக்கமே பெரிதாக இருக்கும்  என்றும் முகமட் கருதுகிறார்.

நேசனல் பீட்லோட் கார்ப்பரேசன் ஊழல் அவற்றுள் முக்கியமான ஒன்று. அந்த விவகாரத்தால் மகளிர், குடும்ப, மேம்பாட்டு அமைச்சர் ஷரிசாட் அப்துல் ஜலில்- அவருடைய குடும்பத்தார்தான் அந்நிறுவனத்தை நடத்துகிறார்கள் என்பதால்- அமைச்சர் பதவியை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

நெகிரி செம்பிலான், கிம்மாஸில் உள்ள அந்நிறுவனம், அரசாங்கம் கொடுத்த கடனைத் தவறாக பயன்படுத்திக்கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.