பொதுத் தேர்தல் முடிவுகள் பலவீனமாக இருந்தால் பொருளாதாரத்திற்கு ஆபத்து என்கிறார் பிரதமர்

najibதற்போது நிலை பெற்று வருகின்ற சீர்திருத்தங்களை ‘ஒரே நாளில்’ செய்ய முடியாது என பிரதமர் நஜிப்  அப்துல் ரசாக் எச்சரித்துள்ளார்.

அடுத்த சில வாரங்களில் தாம் நடத்த வேண்டிய தேர்தலில் தமக்கு வலுவான பெரும்பான்மை கிடைக்கா
விட்டால் மலேசியப் பொருளாதாரம் பின்னோக்கிச் செல்லக் கூடிய அபாயம் இருப்பதாகவும் அவர் சொன்னார்.

நாடாளுமன்ற பெரும்பான்மை குறைவாக இருந்தால் நாட்டின் வரவு செலவுப் பற்றாக்குறையைச் சரி செய்யவும்  முதலீடுகளை அதிகரிக்கவும் தாம் மேற்கொண்டுள்ள முயற்சிகள் நலிவடைவதோடு தாம் பதவியையும் இழக்கக்  கூடும் என்றார் அவர்.

“இந்த நாட்டில் உருமாற்றத்தை விரைவுபடுத்த எங்களுக்கு வலுவான அரசாங்கம் தேவை,” என நிதி
அமைச்சருமான நஜிப், ராய்ட்டர் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

நாட்டு வரலாற்றில் முடிவுகள் மிகவும் அணுக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் தேர்தலை ஏப்ரல் மாத
இறுதிக்குள் நஜிப் நடத்தியாக வேண்டும்.

“பலவீனமான அரசாங்கம் என்பது உறுதியற்ற சூழ்நிலை என அர்த்தம். உலகப் பொருளாதார சூழ்நிலை
நலிவாகவும் உறுதியற்றதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு
பலவீனமான அரசாங்கத்தை நாடு பெற்றிருக்கக் கூடாது.”

முன்னாள் துணைப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமையிலான எதிர்த்தரப்புக் கூட்டணியை இப்போது
பிஎன் எதிர்நோக்குகிறது. நஜிப்பின் சீர்திருத்தங்கள் தேக்கமடைந்து விட்டதாகக் கூறிக் கொண்டு  அம்னோ ஆதிக்கம் பெற்ற  கூட்டணியின் 56 ஆண்டு கால ஆட்சியை மாற்ற வேண்டும் என்ற விருப்பத்தை அவரது கூட்டணி சாதகமாக  பயன்படுத்திக் கொண்டு வருகின்றது.

கடந்த ஆண்டு பொருளாதாரம் 5.6 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளதாலும் நஜிப் கூட்டணியிடம் நிதி வளம்
வலுவாக இருப்பதாலும் மூன்று கட்சிகளைக் கொண்ட எதிர்த்தரப்புக் கூட்டணியை பிஎன் தோற்கடிக்க முடியும்  என நம்பப்படுகின்றது.

ராய்ட்டர்ஸ்