மார்ச் 8-இல் நாடாளுமன்றத்துக்கான அதிகாரம் காலாவதியான பின்னரும் பிரதமர் 13வது பொதுத் தேர்தலை நடத்தாமல் தள்ளிப்போட்டிருப்பது ஒரு “ஜனநாயகக் குற்றம்” என பாஸ் உதவித் தலைவர் மாபுஸ் ஒமார் கூறுகிறார்.
அதிகாரம் முடிந்த பிறகு புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மக்களுக்குத் திருப்பிக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அரசாங்கம் அதைச் செய்யவில்லை.
“இதை ஒரு ஜனநாயகக் குற்றமாகக் கருதுகிறேன். அதிகாரத்தில் தொடர்ந்திருப்பதற்காக பிஎன் அவ்வாறு செய்திருக்கிறது”, என பொக்கொக் செனா எம்பி-யான மாபுஸ், நேற்று கோலாலும்பூரில் பாஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இன்னொரு நிலவரம் பற்றிக் குறிப்பிட்ட அவர், கிழக்கு சாபா பாதுகாப்பு மண்டலம் (Esszone) பற்றியும் முழு விளக்கம் தேவை என்றார். எதிர்வரும் தேர்தலில் அம்மாநிலத்தில் சில இடங்கள் இழக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக பிஎன் அப்படியொரு மண்டலத்தை உருவாக்கியிருப்பதாக சிலர் கூறுகிறார்கள் என்றாரவர்.
“பிஎன் தோல்வியைத் தடுப்பதற்காகத்தான் Esszone தோற்றுவிக்கப்பட்டதா?”, என்ற வினவிய மாபுஸ், பாதுகாப்பின் பொருட்டு அப்படியொரு மண்டலம் உருவாக்கப்பட்டது என்றால் அதைத் தாம் ஆதரிப்பதாகக் கூறினார். ஆனால், அதைப் பயன்படுத்தி ஜனநாயகத்தை ஒடுக்கக் கூடாது என்று வலியுறுத்தினார்.
நஜிப், மார்ச் 25-இல் Esszone அமைக்கப்பட்டிருப்பது பற்றி அறிவித்தார். அப்பாதுகாப்பு மண்டலம் குடாட், கோத்தா மருடு, பித்தாஸ், பெலுரான், சண்டக்கான், கினாபாத்தாங்கான், லஹாட் டத்து, குனாக், செம்போர்ணா, தாவாவ் ஆகிய 10 மாவட்டங்களை உள்ளடக்கியது.
தென் பிலிப்பீன்ஸ் ஊடுருவல்காரர்களுக்கும் மலேசியப் பாதுகாப்புப் படைகளுக்குமிடையில் நிகழ்ந்த மோதல்களை அடுத்து அம்மண்டலம் உருவாக்கப்பட்டது.
கெடாவில் வெவ்வேறு அணிகள்
கெடா நிலவரம் பற்றி வினவியதற்கு அம்மாநில பாஸில் வெவ்வேறு அணிகள் செயல்படுவதை அவர் ஒப்புக்கொண்டார். ஆனால், அது பக்காத்தானின் தேர்தல் பணிகளுக்குத் தடையாக இருக்காது என்றாரவர்.
கெடா மந்திரி புசார் அசிசான் ரசாக்கும், கெடா பாஸ் துணை ஆணையர் பஹ்ரோல்ரசி ஜவாவியும் பல விவகாரங்களில் கருத்துவேறுபாடு கொண்டிருக்கிறார்கள்.