பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், பாடாங் கோத்தாவில் பினாங்கு பிஎன் தலைவர் தெங் சாங் இயோவை எதிர்த்துப் போட்டியிட தமக்கு சம்மதமே என்று கூறியுள்ளார். பாடாங் கோத்தா மூன்று தவணைக்காலம் தெங் வசமிருந்த ஒரு தொகுதியாகும். ஆனால், 2008-இல் அங்கு அவர் தோற்றுப்போனார்.
“தெங்-கை எதிர்த்து கோத்தா பாடாங்கில் களமிறங்க எனக்குச் சம்மதமே. இப்போது அத்தொகுதியை வைத்துள்ள செள கொன் இயோ, என்னுடைய ஆயர் பூத்தே தொகுதிக்குச் செல்ல தயாராக இருக்கிறார்”, என லிம் இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.
“தெங் சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது. ‘விழுந்த இடத்திலேயே எழுந்து நிற்க வேண்டும்’ என்றாரவர். அப்படியானால் பாடாங் கோத்தாவிலேயே சந்திப்போம்”, என்றவர் குறிப்பிட்டார்.
டிஏபி தலைமைச் செயலாளரை எதிர்த்துப் போட்டியிட விரும்புவதாக தெங் நேற்று மலேசியாகினியிடம் தெரிவித்தற்கு மறுமொழியாக லிம் இவ்வாறு கூறினார்.
“இனி, (என்னை எதிர்த்து நிற்பது) அவர் விருப்பம். இது தனிப்பட்டவர்களுக்கிடையிலான ஒரு சவால் அல்ல, முகம்மட் அலிக்கும் ஜோ பக்னருக்குமிடையிலான குத்துச் சண்டை போன்றதுமல்ல.
“இது பினாங்கு மாநிலத்துக்கான கொள்கை பற்றியது”. மலேசியாகினிக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் லிம் இவ்வாறு கூறினார்.
தம் முந்தைய தொகுதி தெங்-குக்கு ‘அவ்வளவு செளகரியமாக இருக்காது’
பாடாங் கோத்தாவில் போட்டியிடுவது தெங்-க்குக்கு அவ்வளவு வசதியாக இருக்காது என்றே கருதப்படுகிறது. அத்தொகுதியை சொள-விடம் இழந்த பின்னர் அவர் அதைவிட்டு விலகியே இருந்திருக்கிறார்.
ஆனால், தெங் மலேசியாகினியிடம் பேசியபோது, “பாடாங் கோத்தாவுக்குத் திரும்பிச் செல்வதில் எனக்குப் பிரச்னை இல்லை”, என்றார்.
கெராக்கான் தலைமைச் செயலாளரான தெங் (இடம்), பினாங்கு தலைநிலத்தில் புக்கிட் தெங்காவில் பிகேஆரின் ஒங் சின் வென்னை எதிர்த்துப் போட்டியிட விரும்புவதாகத்தான் பரவலாக நம்பப்படுகிறது.
அப்படிப்பட்ட நிலையில் அங்குச் செல்லவும் லிம் ஆயத்தமாகவுள்ளார் என்றும் தெங்கை எதிர்த்துப் போட்டியிடுவதற்கு வசதியாக டிஏபியும் பிகேஆரும் தொகுதி மாற்றம் செய்துகொள்ளும் என்றும் வதந்திகள் உலவுகின்றன. இது பற்றி லிம்மிடம் வினவியதற்கு: “நான் ஒன்றும் தெங்குக்கு சவால் விடுக்கவில்லை.
“அவர் என்னுடன் மோத விருப்பம் தெரிவித்ததால் அவருடைய முன்னாள் தொகுதியிலேயே போட்டியிடிவோம் என்றோம் அப்படிச் சொன்னது நியாயம் என்றே நினைக்கிறேன்”, என்றார்.
இதன் தொடர்பில் மாநில டிஏபி மாநிலத் தலைவருமான செள-வின் கருத்தை அறிய முயன்றபோது அவர் வாய் திறக்கவில்லை. “முதலில் தெங்கின் முடிவு தெரிய வேண்டும்”, என்றாரவர்.