நெகிரி செம்பிலான் சட்டமன்றம் இன்று இயல்பாக (automatically) கலைந்துள்ளது. அந்த மாநில வரலாற்றிலும் இந்த நாட்டு வரலாற்றிலும் முதன் முறையாக இயல்பாகவே கலைந்து விட்ட முதல் சட்டமன்றம் அதுவாகும்.
நெகிரி செம்பிலான் மாநில அரசமைப்பு இணங்க சட்டமன்றம் இயல்பாக கலைந்துள்ளது.
36 உறுப்பினர்களைக் கொண்ட அந்த மாநிலச் சட்டமன்றம் 2008 மார்ச் 27ம் தேதி பதவி உறுதி மொழி
எடுத்துக் கொண்டது. அதன் முதல் கூட்டம் ஏப்ரல் 25ம் தேதி நடைபெற்றது. அது முழு ஐந்து ஆண்டு
தவணைக் காலத்துக்கும் செயல்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக இது வரை அறிவிக்கப்படாத நிலையில் இந்த நாட்டில் இயல்பாக
கலைந்து விட்ட முதல் மாநிலச் சட்டமன்றமாக அது திகழ்கிறது.
கலைக்கப்பட்ட பின்னர் மாநில அரசமைப்புக்கு இணங்க மாநில ஆட்சி மன்றம் பராமரிப்பு மாநில
அரசாங்கமாக இயங்கும் என மந்திரி புசார் முகமட் ஹசான் கூறினார்.
மாநில அரசாங்கத்தின் அன்றாட அலுவல்களைக் கவனிப்பதற்காக தாம் தொடர்ந்து மந்திரி புசாராக ஆட்சி
மன்ற உறுப்பினர்களுடன் பணியாற்றப் போவதாக அவர் தெரிவித்தார்.
“பராமரிப்பு அரசாங்கம் என ஒன்று அவசியம் இருக்க வேண்டும். ஏனெனில் நாம் சம்பளம் கொடுக்க
வேண்டும். மற்ற விஷயங்களையும் கவனிக்க வேண்டும். பராமரிப்பு அரசாங்கம் இல்லை என்றால் எல்லாம்
குழப்பமாக இருக்கும்,” என முகமட் சொன்னதாக உள்ளூர் நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
12வது பொதுத் தேர்தலில் பிஎன் சட்டமன்றத்தில் உள்ள 36 இடங்களில் 21ஐ பிடித்தது. டிஏபி 10
இடங்களையும் பிகேஆர் நான்கு இடங்களையும் பாஸ் ஒர் இடத்தையும் பிடித்தன.
நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றம் இயல்பாகவே கலைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அடுத்த 60
நாட்களுக்குள் அங்கு சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.
பெர்னாமா