வீடியோவில் சம்பந்தப்பட்ட சரவாக் வழக்குரைஞர் அலுவலகத்தை எம்ஏசிசி சோதனை செய்தது

MACCGlobal Witness எனப்படும் அனைத்துலக அரசு சாரா அமைப்பு வெளியிட்ட ஊழல் வீடியோவில்  சம்பந்தப்பட்ட வழக்குரைஞர் அல்வின் சொங் அலுவலகத்தை எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு   ஆணைய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை சோதனையிட்டனர்.

கூச்சிங்கில் உள்ள சொங் அலுவலகத்தைப் புத்ராஜெயாவைச் சேர்ந்த எம்ஏசிசி அதிகாரிகள் சோதனை
செய்ததாக சின் சியூ நாளேடு கூறியது.

பல தனிநபர்கள் அந்தச் சோதனைக்கு தடையாக இருந்ததைத் தொடர்ந்து உதவிக்கு போலீஸ்
அழைக்கப்பட்டதாக அந்த ஏடு தெரிவித்தது.

சாதாரண உடையில் இருந்த 10 போலீஸ்காரர்களுடன் எம்ஏசிசி அதிகாரிகள் சொங் அலுவலகத்திற்குள்
பிற்பகல் நுழைந்தனர். அடுத்து அவர்கள் எந்தத் தடையுமின்றி தங்கள் பணியைத் தொடர்ந்தனர்.

அவர்கள் அங்கு பல மணி நேரம் இருந்த பின்னர் சில ஆவணங்களுடன் வெளியேறினர்.

அந்த ஊழல் வீடியோ வெளியான மார்ச் 19ம் தேதியிலிருந்து சொங் அலுவலகத்திற்கு வரவில்லை என சில
வட்டாரங்கள் தெரிவித்ததாகவும் சின் சியூ கூறியது.

அந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் நடைபெறுவதாக கடந்த புதன் கிழமை எம்ஏசிசி விசாரணைப்
பிரிவு இயக்குநர் முஸ்தாபார் அலி மலேசியாகினியிடம் கூறியிருந்தார்.

புதிய ஆதாரங்கள் எம்ஏசிசி விசாரணை வழி காட்டும்

‘புதிய ஆதாரங்களைக் கொண்டு அதற்கு இணங்க எம்ஏசிசி செயல்படும்,” என அவர் தமது குறுஞ்செய்தியில்
கூறியிருந்தார்.

சொங், சரவாக் அரசாங்கத்தையும் அரசாங்கத்துடன் தொடர்புள்ள நிறுவனங்களையும் முதலமைச்சர் தாயிப்
மாஹ்முட் -உடன் தொடர்புடைய பல பொது நிறுவனங்களையும் பிரதிநிதிக்கும் அல்வின் சொங் அண்ட்
பார்ட்னர்ஸ் என்னும் வழக்குரைஞர் நிறுவனத்தைச் சார்ந்தவர் ஆவார்.

“வெட்டுமர நிலத்தை விற்பதற்காக தாயிப் உறவினர்களால் நியமிக்கப்பட்டதாக கூறப்பட்ட அவர், அந்நிய
முதலீட்டாளர் எனத் தம்மைக் காட்டிக் கொண்ட Global Witness புலனாய்வாளர் ஒருவருடன் பேரம் பேசுவதை
அந்த வீடியோ காட்டியது. வரிகளை ஏய்ப்பது, உள்ளூர் மக்கள் 51 விழுக்காடு பங்கு உரிமையைப் பெற்றிருக்க
வேண்டும் என்ற விதிமுறையை எப்படி முறியடிப்பது போன்ற விஷயங்கள் அந்த உரையாடலில் இருந்தன.”

தாயிப் உறவினர்களும் முக்கிய வர்த்தகப் பங்காளிகளும் வெட்டுமர அனுமதிகளைத் தவறாகப்
பயன்படுத்துவதாக கூறப்படுவதையும் அந்த வீடியோ அம்பலப்படுத்தியது.

அந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள தாயிப், தமது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதே அதன் நோக்கம்  என்றார்.