பபாகோமோ என்ற புனைபெயரில் பிரபலமாக விளங்கும் வலைப்பதிவர் வான் முகம்மட் அஸ்ரி வான் டெரிஸ், போலீஸ் படையிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து அஞ்சல் வாக்காளர் என்ற தகுதியை இழந்து விட்டார் என்பதை போலீஸ் தெளிவுபடுத்தியுள்ளது.
வான் முகம்மட் அஸ்ரி 2005, அக்டோபர் 31-இல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதாக தேசிய போலீஸ் படையின் நிர்வாகப் பிரிவு இயக்குனர் மொர்டாட்சா நஸ்ரேன் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
2012-இல் அவர் குற்றவாளி என்ற தீர்ப்பு நிலைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர் போலீஸ் படையிலிருந்து நீக்கப்பட்டார்.
“அதனை அடுத்து போலீஸ் ஆவணத்தின்படி அவர் ஒரு அஞ்சல் வாக்காளர் அல்ல”, என்றாரவர்.
2010-இல், பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி, வான் முகம்மட் அஸ்ரி, போலீஸ் அடையாள அட்டையும் சிவிலியன்களுக்கான அடையாள அட்டையும் வைத்திருப்பதாகக் கூறி இருந்தார்.
வான் முகம்மட் அஸ்ரியின் அடையாள அட்டை எண்களை வைத்து தேர்தல் ஆணைய (இசி) இணையத்தளத்தில் ஆராய்ந்ததில் அவர் இரண்டு வெவ்வேறு இடங்களில் வாக்காளராக பதிவாகி இருப்பது தெரிய வந்ததாக அவர் கூறினார்,
ரபிஸி அக்குற்றச்சாட்டைச் சுமத்திய மறு நாளே, இசி, வான் முகம்மட் அஸ்ரியின் போலீஸ் அடையாள அட்டை எண்ணை வாக்காளர் பட்டியலிலிருந்து எடுத்து விட்டது.
அது அகற்றப்பட்டு விட்டதால், வான் முகம்மட் அஸ்ரி போலீசின் அஞ்சல் வாக்காளரா சிவிலியன் வாக்காளரா என்ற கேள்விக்கே இனி இடமில்லை என்று மொர்டாட்சா கூறினார்.