லீமா 2013ல் 4.2 பில்லியன் ரிங்கிட் பெறும் 24 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின

zahidமொத்தம் 4.2 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள தற்காப்புத் தளவாடங்கள், சேவைகள் சம்பந்தப்பட்ட 24  ஒப்பந்தங்கள் லீமா 2013 என அழைக்கப்படும் லங்காவி அனைத்துலக கடல் ஆகாயக் கண்காட்சியில்  கையெழுத்திடப்பட்டுள்ளதாகத் தற்காப்பு அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி இன்று தகவல் வெளியிட்டுள்ளார்.

அந்த ஒப்பந்தங்கள் தற்காப்பு அமைச்சு , உள்நாட்டு அனைத்துலகத் தற்காப்பு நிறுவனங்கள், பாகாங்
அரசாங்கம் ஆகியவற்றுக்கு இடையில் அந்த ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

ஆறு அரசாங்கக் குத்தகைகள், அமைச்சின் மூன்று இணக்கக் கடிதங்கள், 11 ஒப்பந்தக் குறிப்புக்கள், நான்கு
புரிந்துணர்வுக் குறிப்புக்கள் ஆகியவை அந்த ஒப்பந்தங்களில் அடங்கும் என அகமட் ஸாஹிட் மேலும்
தெரிவித்தார்.

“நாட்டின் தற்காப்புத் தொழில் துறையை வலுப்படுத்துவதும் பேராக் சுங்காயில் உள்ள மலேசியத் தற்காப்பு,
பாதுகாப்பு தொழில்நுட்பப் பூங்காவில் ஐரோப்பிய நிறுவனங்களுக்கு இடத்தை உருவாக்குவதும் அந்த
ஒப்பந்தங்களின் நோக்கம்,” என அவர் லங்காவியில் நிருபர்களிடம் கூறினார்.

லங்காவியில் தற்காப்பு அமைச்சுக்கும் பல தற்காப்பு நிறுவனங்களுக்கும் இடையில் ஒப்பந்தங்களும் குத்தகைகளும்  கையெழுத்தான சடங்கைப் பார்வையிட்ட பின்னர் அவர் நிருபர்களைச் சந்தித்தார்.zahid1

அந்தச் சடங்கின் போது ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் சுல்கெப்லி முகமட் ஜின் -னும்
உடனிருந்தார்.

மலேசியத் தற்காப்பு, பாதுகாப்பு தொழில்நுட்பப் பூங்கா சம்பந்தப்பட்ட 2.7 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 9
ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும் அகமட் ஸாஹிட் சொன்னார்,

அந்தப் பூங்கா, அடுத்த 12 ஆண்டுகளில் மூன்று கட்டங்கலாக மேம்படுத்தப்படும் என அதனை நிர்வாகம்
MDSTP Sdn Bhd-ன் தலைமை நிர்வாக அதிகாரி அகமட் பேரிஸ் அப்துல் ஹலிம் கூறினார்.