பிகேஆர்: இந்துக்களை இழித்துரைத்த பெர்காசா உதவித் தலைவர்மீது நடவடிக்கை தேவை

1videoஇந்து சமயத்தவரை ஆத்திரப்பட வைக்கும் விதத்தில் பேசிய மலாய் உரிமைக்காக போராடும் பெர்காசா அமைப்பின் உதவித் தலைவர் சுல்கிப்ளி நூர்டின்மீது குற்றவியல் சட்டத்தின்கீழ் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பிகேஆர் அறைகூவல் விடுத்துள்ளது.

ஐந்து நிமிடத்துக்குமேல் நீளும் ஒரு காணொளியில், சுல்கிப்ளி “இந்துக்களையும் அவர்களின் சமயத்தையும் படுமோசமாக இழித்துரைத்திருக்கிறார்” என பிகேஆர் உதவித் தலைவர் என். சுரேந்திரன் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

1video1அந்த கூலிம்-பண்டார் பாரு எம்பிமீது சட்டத்துறைத் தலைவரும் போலீஸ் தலைவரும் குற்றவியல் சட்டம் பகுதி 298ஏ-இன்கீழ் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சுரேந்திரன் (இடம்) கேட்டுக்கொண்டார்.

அச்சட்டம் நல்லிணக்கத்தைக் கெடுப்போருக்கு இரண்டாண்டிலிருந்து ஐந்தாண்டுவரை சிறைத்தண்டனை விதிக்க வகை செய்கிறது.

அக்காணொளியில் சுல்கிப்ளி,  இந்து தெய்வச் சிலைகளை விற்பனை செய்யும் ஒரு கடைக்காரருடன் அவருடைய கடைக்குள் வெள்ளம் புகுந்த சம்பவத்துக்குப் பின்னர்  பேசியதாகக் குறிப்பிட்டார்.

வெள்ளத்தால் கடையும் அதிலிருந்த சிலைகளும் பாதிக்கப்பட்டதாக கடைக்காரர் தெரிவித்ததாக அவர் கூறினார்.

“தெய்வங்களின் உருவச் சிலைகளும்கூடவா பாதிக்கப்பட்டன? எப்படி? அவை தெய்வங்கள் ஆயிற்றே?  கடைக்கு முன்னால் அவற்றை வரிசையாக வைத்து வெள்ளம்  கடைக்குள் வராமல் தடுத்து அதை இந்திய முஸ்லிம்களின் கடை பக்கமாக திருப்பி விட்டிருக்கலாமே, ஏன் அதைச் செய்யவில்லை?

“கடவுள் நம்மைப் பாதுகாப்பார் என்கிறபோது அதை ஏன் செய்யவில்லை?  அவற்றால் வெள்ளத்தைக்கூட தடுத்து நிறுத்த முடியவில்லையே.  அதற்கு அந்தக் கடைக்காரர் ‘அது எப்படி முடியும். அது வெறும் கல்தானே’என்றார்”.இவ்வாறு சுல்கிப்ளி பேசி இருந்தார்.

அக்காணொளி,  ‘Chandra Lawan Tetap Lawan’ என்ற தலைப்பைக்கொண்ட பக்காத்தான் -ஆதரவு யு-டியுப்பிலும் முகநூலிலும் பதிவேற்றப்பட்டுள்ளது.

ஆனால், அக் காணொளி எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்பதோ, சுல்கிப்ளியின் பேச்சு திரித்து வெளியிடப்பட்டதா என்பதோ தெரியவில்லை.

சுல்கிப்ளி, முன்பு பிகேஆர் உறுப்பினராக இருந்தவர். ‘இறைவன்’ என்பதை ‘அல்லாஹ்’ என்று மலாயில் மொழிபெயர்ப்பது தொடர்பில் கட்சி கொண்ட நிலைபாட்டுடன் ஒத்துப்போக முடியாததால் அவர் கட்சியிலிருந்து  நீக்கப்பட்டார்.

 

 

TAGS: