டிஏபி கட்சியின் இணையத் தொலைக்காட்சியான உபா டிவி (UbahTV) முதல் விருந்தினராக நஜிப்பை பேட்டி காண அவரை அழைக்க விரும்புகிறது.
அந்தத் தொலைக்காட்சி தாராளப் போக்குடையது, எல்லாத் தரப்புக்களுக்கும் பதில் அளிக்கும் உரிமையைத் தர விரும்புகிறது என்பதை நிரூபிப்பது அதன் நோக்கமாகும்.
“மரியாதை நிமித்தம் அது எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமாக இருக்க வேண்டும்
(அழைக்கப்படுவார்) ஆனால் எங்கள் முதல் விருந்தினராக நஜிப்பை நாங்கள் அழைக்கிறோம்.”
” எங்கள் தரப்புச் செய்திகளை கொடுப்பதற்காக உபா டிவி-யை (UbahTV) டிஏபி தொடங்கியுள்ளது
உண்மை தான். என்றாலும் பதில் சொல்வதற்கான உரிமையை மற்ற தரப்புக்கும் வழங்க நாங்கள்
விரும்புகிறோம்,” என அதன் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறினார்.
அவர் இன்று கோலாலம்பூரில் அந்த இணையத் தொலைக்காட்சி அலைவரிசையைத் தொடக்கி வைத்த பின்னர் நிருபர்களிடம் பேசினார்.
உபா டிவி-யில் பிஎன் குறித்தும் அரசாங்கக் கொள்கைகள் குறித்தும் கேள்வி எழுப்பப்படும் என்றும் அதனால்
பதில் அளிக்கும் உரிமையைப் பிரதமருக்கு வழங்குவது நியாயமானது என்றும் அவர் சொன்னார்.
பிஎன் கட்டுக்குள் உள்ள ஊடகங்களிலும் அரசாங்கத்துக்கு சொந்தமான ஊடகங்களிலும் அன்றாடம்
எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன. ஆனால் அதற்குப் பதில் அளிக்கும் உரிமை
எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்படுவது இல்லை என்றும் லிம் சொன்னார்.