பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தனியார் பஸ் நிறுவனங்களுக்கு பக்காத்தான் உதவிக்கரம் நீட்டுகின்றது

Busஅரசாங்கத்துக்குச் சொந்தமான ராபிட் பஸ் சேவைகள் நாடு முழுவதும் வெகு வேகமாக  விரிவுபடுத்தப்படுவதால் திவால் நிலையை எதிர்நோக்கும் தனியார் பஸ் நிறுவன உரிமையாளர்களுக்கு பக்காத்தான் ராக்யாட் உதவிக் கரம் நீட்டியுள்ளது.

“பக்காத்தானில் உள்ள நாங்கள் உங்கள் குரலை செவிமடுக்கிறோம். தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே
இருக்கின்றன.”

“அரசுக்குச் சொந்தமான பஸ் நிறுவனங்களுக்கு துணையாக நடப்பில் உள்ள தனியார் பஸ் நிறுவனங்களும்
சேவையாற்றுவதற்கு பொருத்தமான பொதுப் போக்குவரத்துக் கொள்கையை நாங்கள் தயாரிப்போம்,” என
செலாயாங் எம்பி வில்லியம் லியோங் இன்று காலை பிகேஆர் தலைமையகத்தில் நிருபர்களிடம் கூறினார்.

அகில மலேசிய பஸ் உரிமையாளர் சங்கம் (PMBOA) தரைப் பொதுப் போக்குவரத்து ஆணையத்திடம் (Spad)
தெரிவித்த புகாருக்கு பலன் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.Bus1

பிரசாரானாவுக்குச் சொந்தமான ராபிட் பஸ்களுடன் தான் போட்டியிட முடியவில்லை என்று ஜனவரி 9ம் தேதி
Spad-க்கு அனுப்பிய ஒரு கடிதத்தில் PMBOA வருத்தத்துடன் தெரிவித்துக் கொண்டிருந்தது. அத்துடன்
பிரசாரானா நாடு முழுவதும் தனது சேவைகளை விரிவுபடுத்த எண்ணியிருப்பதையும் அது சுட்டிக் காட்டியது.

“பஸ் தொழிலை ராபிட் தேசியமயமாக்கப் போவதால் அரசாங்கத்தின் நோக்கம் தெளிவாகியுள்ளது. அந்த
நிலையில் பொருளாதார ரீதியில் செயல்பட முடியாததால் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள
விரும்பும் தனியார் பஸ் நிறுவனங்களுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்குவதே நியாயமானது,” என்றும் அந்தக்
கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தனியார் பஸ் நிறுவங்களுக்கு உதவித் தொகை ஏதும் வழங்கப்படவில்லை என்பதைத் தெரிவித்த லியோங், 180   மில்லியன் ரிங்கிட் வருமானத்தை பெறும் ராபிட் பஸ் சேவைக்கு 280 மில்லியன் ரிங்கிட் உதவித் தொகை
கொடுக்கப்படுவதாகக் கூறினார்.

“அரசாங்கம் பஸ் சேவையை தேசிய மயமாக்கக் கூடாது என நாங்கள் சொல்லவில்லை. ஆனால் நோக்கம்
அதுவாக இருந்தால் அது நியாயமான முறையில் செயல்படுத்தப்பட வேண்டும்,” என்றார் அவர்.

பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால் தனியார் பஸ் நிறுவனங்களிடமிருந்து தொழிலை எடுத்துக் கொள்வதற்கு பதில்  அவை பொதுப் போக்குவரத்துச் சேவையாக துணையாக இயங்குவதை உறுதி செய்யும் என லியோங்
தெரிவித்தார்.