எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் வரும் பொதுத் தேர்தலில் பேராக்கில் எந்தத் தொகுதியிலும் போட்டியிடும் சாத்தியம் இல்லை.
தமது பெர்மாத்தாங் பாவ் தொகுதிக்குப் பதில் பேராக் அல்லது சிலாங்கூரில் தாம் போட்டியிட எண்ணம்
கொண்டுள்ளதாக அன்வாரே அறிவித்துள்ள போதிலும் அவர் பேராக்கை தேர்வு செய்யும் வாய்ப்பு மிகவும்
குறைவு என பேராக் மாநில மூத்த பிகேஆர் தலைவர் ஒருவர் கூறினார்.
“எங்களுக்குத் தெரிந்த வேட்பாளர் பட்டியல் படி அவர் இங்கு எந்த இடத்திலும் போட்டியிடவில்லை,” என
அவர் மலாய் மெயில் நாளேட்டிடம் தெரிவித்தார்.
“அன்வார் கோப்பெங்கில் போட்டியிட விரும்புவதாகச் சொல்லப்படுவது வெறும் ஊகங்களே.”
என்றாலும் அம்னோவில் பீதியை ஏற்படுத்துவதற்கு அன்வார் நடத்தும் அரசியல் ஆட்டமாகவும் அவரது
அறிவிப்பு இருக்கலாம் என்ற சாத்தியத்தை அவர் நிராகரிக்கவில்லை.
இப்போதைக்கு பெர்மாத்தாங் பாவ் இடம் பக்காத்தான் ராக்யாட்டுக்குப் பாதுகாப்பனதாகக் கருதப்படுகிறது.
அதனால் அதிக ஆபத்துள்ள மற்ற இடங்களுக்கு அவர் செல்ல விரும்பலாம் என்றார் அவர்.
“அவர் இந்த முறை பெர்மாத்தாங் பாவ் இடத்தைத் தற்காப்பது அவருக்கு நல்லது. என்றாலும் அந்தக் கட்சி இன்னொரு இடத்தைப் பிடிப்பதற்கு அவர் உதவி செய்ய வேண்டும் என கட்சிக்குள் யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.”
சிலாங்கூரில் ஒரு தொகுதியில் போட்டியிடுவதற்கு அன்வார் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் நிறைய இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பொருத்தமான இடத்தை அன்வாருக்கு தெரிவு செய்வதே பிரச்னை என்றும் அந்த பேராக் மாநில மூத்த பிகேஆர் தலைவர் குறிப்பிட்டார்.
“அவர் சிலாங்கூரில் போட்டியிடுவதற்கு சரியான இடத்தை அவர்கள் தேடுகின்றனர். ஆனால் இது வரை
எதுவும் தென்படவில்லை,” என்றார் அவர்.
மலாய் மெயில்