பிரதமர் மாநில பிஎன் தலைவர்களைத் தொடர்ந்து சந்தித்து வருகிறார்

1bnபிரதமர் நஜிப் அப்துல் ரசாக், மாநில பாரிசான் நேசனல் தலைவர்களையும் அம்னோ தொடர்புக்குழுக்களையும் சந்தித்துப் பேசுவது இன்றும் தொடர்ந்தது.

காலை எட்டு மணிக்கே தொடங்கிவிட்ட இச்சந்திப்புகள், எந்த நேரத்திலும் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் 13வது பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை இறுதிசெய்யும் நோக்கம் கொண்டவை என்று நம்பப்படுகிறது.

இன்று காலை சரவாக் முதலமைச்சர் அப்துல் தயிப் மஹ்மூட், பெர்லிஸ் மந்திரி புசார் டாக்டர் முகம்மட் இசா சாபு,  பினாங்கு அம்னோ தொடர்புக்குழுத் தலைவர் சைனல் அபிடின் ஒஸ்மான், பெர்லிஸ் அம்னோ தொடர்புக்குழுத் துணை தலைவர் ஷாகிடான் காசிம் ஆகியோர் பிரதமர் அலுவலகம் செல்லக் காணப்பட்டனர்.

அச்சந்திப்புகளில் துணைப் பிரதமர் முகைதின் யாசினும் பிஎன் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் மன்சூரும் கலந்து கொண்டனர்.

பிரதமர் அலுவலகத்திலிருந்து வெளியேறும்போதும் காரை மெதுவாக செலுத்த வைத்த சைனல் அபிடின், காலை ஏழு மணியிலிருந்தே அதன் நுழைவாயில் காத்திருந்த செய்தியாளர்களிடம் “எல்லாம் ஓகே”, என்று சொல்லிச் சென்றார்.

ஷகிடானும் அதையேதான் சொன்னார். அத்துடன் “இறைவன் உங்களுக்கு அருள்வானாக. வாழ்க பிஎன்”, என்றார்.

பிற்பகலில். கெடா அம்னோ தொடர்புக்குழுத் தலைவர் அஹ்மட் பாஷா முகம்மட் ஹனிபா, துணைத் தலைவர் முக்ரிஸ் மகாதிர், நெகிரி செம்பிலான் மந்திரி புசார் முகம்மட் ஹசன் ஆகியோர் பிரதமரைச் சந்திக்கச் சென்றார்கள்.

-பெர்னாமா