மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) ஆடல் பாடல் நிறைந்த அதன் காணொளி பரப்புரைத் தட்டுகளை கோலாலம்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் வெளியிட்டது.
எதிர்வரும் 13 ஆவது பொதுத் தேர்தலில் மலேசிய மக்கள் நாட்டை ஆண்டு வரும் பாரிசான் கூட்டணிக்கு ஓய்வு கொடுத்து வீட்டிற்கு அனுப்ப வேண்டும். ஏன் அவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பாடல்களுடன் கூடிய நடனக் காட்சிகளுடன் மிகச் சிறப்பாக தயாரிக்கப்பட காணொளி தட்டுகள் வழி கூறப்பட்டது.
நேற்று (மார்ச் 28) கோலாலம்பூர் சீன அசெம்பிளி அரங்கத்தில் நடைபெற்ற அக்காணொளி தட்டுகள் வெளியீடு நிகழ்ச்சியில் .சுமார் 50 பேர் கலந்து கொண்டனர். பிஎஸ்எம்மின் தலைவர் டாக்டர் நசீர், துணைத் தலைவர் சரஸ்வதி மற்றும் பொதுச் செயலாளர் அருட்செல்வன் ஆகியோரும் அங்கிருந்தனர். அவர்களுடன் சுவாராம் தலைவர் கா. ஆறுமுகம் மற்றும் நியட் தலைவர் தஸ்லிம் இப்ராகிமும் அந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பாட்டாளிகளைத் தட்டி எழுப்பும் பாடல்கள்
உலக வரலாற்றில் பாட்டாளி வர்க்கம் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் பாடல்கள் மிக முக்கிய பங்காற்றியுள்ளன என்று பிஎஸ்எம் வழங்கும் “மக்கள் படும் பாடு 2.0” காணொளி தட்டு வெளியீடு நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து உரையாற்றிய துணைத் தலைவர் சரஸ்வதி கூறினார்.
பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்தில் அவர்களின் ஆயுதமாக இருந்தது, இருந்து வருவது பாடல், எழுத்து மற்றும் நாடகம் ஆகியவைதான் என்றாரவர்.
போராட்டத்தின் இலட்சியத்தை மக்கள் எளிதாகப் புரிந்து கொள்வதற்கும், அதில் ஈடுபாடு கொள்வதற்கும் இச்செயல்முறை உலக முழுவதிலும் பின்பற்றப்பட்டு வருகிறது என்று அவர் மேலும் கூறினார்.
“நாங்கள் (பிஎஸ்எம்) பாடல்கள், நாடகங்கள் மற்றும் எழுத்து ஆகிய படைப்புகளின் வழி போராடுகிறோம். காணொளியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் பாடல்கள் இந்நாட்டின் பட்டி தொட்டி எல்லாம் ஒலிக்க வேண்டும்”, என்றார் சரஸ்வதி.
எதிர்வரும் 13 ஆவது பொதுத் தேர்தல் மிக முக்கியமானது. மக்களின் ஒருமித்த பங்கேற்பிற்கு இப்பாடல்கள் உதவும் என்று நம்பிக்கை தெரிவித்த சரஸ்வதி, இப்பாடல்களை எழுதி, காணொளியை தயாரிப்பதில் பெரும் பங்காற்றிய கட்சியின் தொண்டர் கி. குணசேகரனை வெகுவாகப் பாராட்டினார்.
நான்கு தொகுதிகளிலும் போட்டி
கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் இம்முறையும் பிஎஸ்எம் போட்டியிடும். டாக்டர் ஜெயக்குமார் – சுங்கை சிப்புட் நாடாளுமன்றம், டாக்டர் நசீர் – கோத்தா டாமன்சாரா, அருட்செல்வன் – செமிஞ்சி மற்றும் சரஸ்வதி – ஜெலெப்பாங் ஆகியவை அந்த நான்கு தொகுதிகளாகும்.
மேலும், பிஎஸ்எம் அதன் சொந்த கைமுட்டி சின்னத்தின் கீழ் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது.
உழைப்பும் முதலீடும்
மக்களின் உழைப்பும் முதலீடும்தான் நாட்டின் செல்வம். அதனைப் பகிர்ந்தளிப்பதில்தான் போராட்டம் என்று சுவாராம் என்ற மனித உரிமை கழகத்தின் தலைவர் கா. ஆறுமுகம் அவரது உரையில் கூறினார்.
தொழிலாளர்களின் போராட்டத்தில் பாடல், நாடகம் மற்றும் எழுத்துப் படைப்புகள் ஆற்றிவரும் பங்கிற்கு நீண்ட வரலாறு இருக்கிறது என்று கூறிய அவர், இந்நாட்டில் பிஎஸ்எம் அதன் தொடக்ககாலத்திலிருந்து இம்முறையைப் பின்பற்றி வருகிறது என்றார்.
“தேர்தலில் போட்டியிட வேண்டும். நாடாளுமன்றம் செல்ல வேண்டும். ஏன்? மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுக்காகவே ஆட்சிமன்றங்களுக்குச் செல்ல வேண்டும். மக்களுக்காக உழைக்க வேண்டும். அதனைச் செய்வதுதான் பிஎஸ்எம்”, என்று ஆறுமுகம் மேலும் கூறினார்.
தோட்டப் பாட்டாளிகளுக்காக கடுமையாக, தொடர்ந்து போராடி வெற்றிகள் ஈட்டியுள்ள பிஎஸ்எம்மை பாராட்டிய அவர், இந்திய மக்களுக்காக போராடுகிறோம் என்று ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கும் கூட்டத்தினருக்குச் சொந்தமான தும்புக் தோட்டத் தொழிலாளர்கள் அனுபவித்தத் துன்பங்களைப் பட்டியலிட்டு, அத்தோட்டத் தொழிலாளர்களுக்காக பிஎஸ்எம் நடத்திய போராட்டத்தையும், இறுதியில் அத்தோட்டத் தொழிலாளர்களுக்குச் சாதகமான ஓர் ஒப்பந்தத்தை எவ்வாறு அக்கட்சியின் பொதுச் செயலாளர் அருட்செல்வன் பெற்றார் என்பதையும் விளக்கினார்.
“இதுதான் மக்களுக்கு உழைப்பது என்பதின் அர்த்தமாகும். அதற்காகத்தான் நாடாளுமன்றம் செல்ல வேண்டும். அதற்கான தகுதி பிஎஸ்எம்முக்கு உண்டு”, என்றாரவர்.
மாற்றம் வேண்டும் என்பதை வலியுறுத்தும் பாடல்களைக் கொண்ட பிஎஸ்எம் வழங்கும் இக்காணொளிகள் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதில் ஐயத்திற்கிடமில்லை என்று கூறிய ஆறுமுகம், பாடல் ஆசிரியர் கி. குணசேகரனுக்கு பாராட்டு தெரிவித்தார்.
வரலாறு படைக்கும் காலம் இது
“நான் ஒரு முதலாளி. ஆனால், மாறுபட்ட முதலாளி. ஒவ்வொரு தொழிலாளியும் பணி புரியும் நிறுவனத்தின் பங்குதாரராக இருக்க வேண்டும்”, என்று நியட் அமைப்பின் தலைவர் தஸ்லிம் இப்ராகிம் கூறினார்.
இன்று வெளியீடு காணும் காணொளி பாட்டுகளை கூர்ந்து கேட்டால், மாற்றம் நிச்சயம் வரும் என்று அவர் மேலும் கூறினார்.
“உங்கள் போராட்டத்தில் எனக்கு என்றும் பங்குண்டு. வரலாறு படைக்கக்கூடிய வாய்ப்பு இது”, என்று கூறிய அவர் “பிஎஸ்எம் அதன் சின்னத்தின் கீழ் போட்டியிட அனுமதிக்கப்பட வேண்டும் என்றாரவர்.
பிஎஸ்எம் எனது கோயில்
காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ள பாட்டுகள் மற்றும் அவற்றை உருவாக்கி பதிவு செய்வதில் அவருக்குக் கிடைத்த அனுபங்களைப் பகிர்ந்து கொண்ட பாடல் ஆசிரியர் கி. குணசேகரன், “பிஎஸ்எம் எனது கோயில்”, என்று கூறி கட்சியின் மீது அவருக்குள்ள ஈடுபாட்டை வெளிப்படித்தினார். அவர் பிஎஸ்எம் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் மீண்டும் போட்டியிடுவதில் என்ன தவறு என்று கேள்விகளைத் தொடுத்தார். “நாங்கள் மக்கள் கூட்டணியின் தோழர்கள். நாங்கள் எங்கள் கட்சியின் சின்னத்தின் கீழ் போட்டியிடுவோம். இதில் விட்டுக்கொடுத்தல் என்பதற்கு இடமே இல்லை”, என்று அவர் முழக்கமிட்டார்.
இக்காணொளி தட்டை தயாரித்ததில் அவருடைய தம்பி கொண்டிருந்த ஈடுபாட்டை அவர் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.