தேர்தல் ஆணையம் புகாரைப் பெற்றுக் கொண்டதற்கான ஆதாரத்தைக் நுருல் இஸ்ஸா காட்டுகிறார்

nurulலெம்பாய் பந்தாய் தொகுதிக்கான வாக்காளர் பட்டியல் குறித்த தமது அதிகாரத்துவப் புகாரை தேர்தல்  ஆணையம் (இசி) பெற்றுக் கொண்டதற்கான ஆதாரத்தை அந்தத் தொகுதி எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் காட்டியுள்ளார்.

மார்ச் 4ம் தேதி தமது வழக்குரைஞர்களான சூய் அண்ட் கம்பெனி புகார் கடிதங்களை அனுப்பியதாகவும் பின்னர் தமது தொகுதியில் போலி வாக்காளர்கள் எனக் கூறப்படுவது மீது நீதித் துறை மறு ஆய்வுக்கு விண்ணப்பித்துக் கொண்டதாகவும் அவர் சொன்னார்.

தமது வழக்குரைஞர்கள் அனுப்பிய கடிதத்தை மார்ச் 8ம் தேதி இசி செயலாளர் கமாருதின் முகமட் பாபா பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் ரசீதை அந்த எம்பி இன்று நிருபர்கள் சந்திப்பில் காட்டினார்.

நீதித் துறை மறு ஆய்வுக்கு விண்ணப்பிக்கும் முன்னர் நுருல் இஸ்ஸா இசி-யிடம் புகார் செய்யவே இல்லை என  இசி தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் சொன்னதாக அம்னோவுக்கு சொந்தமான மிங்குவான் மலேசியா  நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.

தமது தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் காணப்படும் பிரச்னைக்குரிய 4,500 வாக்காளர்களை நீக்குவதற்கு நீதிமன்ற உத்தரவை நுருல் இஸ்ஸா தமது விண்ணப்பத்தில் நாடியுள்ளார்.

அந்த 4,500 பேரில் சிலர் காலமாகி விட்டனர். பலருக்கு முழுமையான முகவரி அல்லது தெரியாத முகவரிகள் உள்ளன. சிலர் லெம்பா பந்தாயில் வசிக்கவில்லை.