குவான் எங் -உடன் மோதுவதற்கு இடத்தை தாம் தேர்வு செய்ய வேண்டும் என்கிறார் தெங்

1bnவரும் தேர்தலில் முதலமைச்சர் லிம் குவான் எங்-கிற்கு எதிராகப் போட்டியிடும் தொகுதியை தாம் முடிவு செய்ய  வேண்டும் என்பதில் பினாங்கு பிஎன் தலைவர் தெங் சாங் இயூ பிடிவாதமாக இருக்கிறார்.

“இடத்தை நான் தான் முடிவு செய்ய வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். முதலமைச்சர்
என்பதால் எந்த இடத்திலும் நிற்கும் துணிச்சல் அவருக்கு வேண்டும்,” என தெங் இன்று நிருபர்களிடம்
கூறினார்.

“பல இனங்களைக் கொண்ட தொகுதிகள் இரண்டு கட்சிகளுக்கும் நல்ல களமாகும்.”

“பினாங்கு மக்களுக்குத் தமது கொள்கைகள் முழுமையாக அமலாக்கப்படுவதைக் காணத் தாம்
உறுதிபூண்டுள்ளதைக் காட்டுவதற்கு அவர் மாநிலத் தொகுதி ஒன்றில் அவர் போட்டியிட வேண்டும்,” என்றார்
தெங்.

“நான் சட்ட மன்றத் தொகுதி ஒன்றுக்கு மட்டும் போட்டியிடப் போவதாக அறிவித்ததின் மூலம் என்
கடப்பாட்டை தெரிவித்து விட்டேன்.”

பாடாங் கோத்தா லாமா தொகுதியில் போட்டியிட தெங் ஒப்புக் கொண்டால் மாநிலச் சட்டமன்றத் தொகுதி
ஒன்றில் மட்டும் போட்டியிடத் தாம் ஒப்புக் கொள்வதாக லிம் கூறியுள்ளதற்கு தெங் பதில் அளித்தார்.

பாடாங் கோத்தா-வில் போட்டியிட தெங் மறுத்தால் தாம் இனிமேல் அவருக்குப் பதில் சொல்லப் போவதில்லை  என்றும் லிம் அறிவித்தார்.

சீனர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பாடாங் கோத்தா சட்டமன்றத் தொகுதிக்கு மூன்று தவணைகளுக்கு  தெங் உறுப்பினராக இருந்துள்ளார். அந்தத் தொகுதியில் அவர் 2008 தேர்தலில் மாநில டிஏபி தலைவர் சாவ்  கோன் இயாவ்-விடம் தோல்வி கண்டார்.