மசீச உதவித் தலைவர் கான் பிங் சியு, குளுவாங்கில் டிஏபி-இன் லியு சின் தொங்கை எதிர்த்துப் போட்டியிடத் தயாரா என்று தமக்குச் சவால் விடுக்கும் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் அதன்வழி மசீசவில் குழப்பம் விளைவிக்கப் பார்க்கிறார் எனச் சாடியுள்ளார்.
அத்தொகுதியில் யார் வேட்பாளர் என்பதை மசீச இன்னும் முடிவு செய்யவில்லை.
அத்தொகுதிமீது அதன் நடப்பு எம்பி ஹொவ் கொக் சூங், கான் (இடம்) ஆகிய இருவருமே குறி வைத்திருப்பதாகத் தெரிகிறது.
“லிம் எங்களுக்குள் பிணக்கை உண்டுபண்ணப் பார்க்கிறார். அவர் விரிக்கும் வலையில் நாங்கள் விழ மாட்டோம். அவர் முதலில் தம் சொந்த வீட்டைச் சரிசெய்யட்டும்”, என்று கான் இன்று காலை செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.
லிம் முதலில் இச்சவாலை விடுத்தபோது அவர்தான் குளுவாங்கில் போட்டியிட வரப்போகிறார் என்று நினைத்துப் பரபரப்படைந்ததாக கான் கிண்டலடித்தார்.
லியு குளுவாங்கில் போட்டியிட வருவதை வரவேற்ற கான், அங்கு அவரை எதிர்த்துப் போட்டியிடப்போவது யார் என்பதைக் கட்சியின் முடிவுக்கே விட்டு விடுவதாகக் கூறினார்.
“கட்சியின் தேசிய தலைவர் என்ற முறையில் தேர்தலில் போட்டியிடும் பொறுப்பும் உண்டுதான். ஆனால், எந்தத் தொகுதியில் போட்டியிடுவது என்பதைக் கட்சிதான் முடிவு செய்யும்”, என்றாரவர்.
ஆனால், வரும் பொதுத் தேர்தலில் தாம் சட்டமன்றத்துக்குப் போட்டியிடப்போவதில்லை என்பதை மட்டும் அவர் உறுதிப்படுத்தினார்.
மசீச கடந்த பொதுத் தேர்தலில் குளுவாங்கில் ஆதரவு குறையக் காரணமாக இருந்த பலவீனத்தைத் திருத்திக் கொண்டிருக்கிறது என்றும் இப்போது அதை எந்த நேரத்திலும் டிஏபி-யை எதிர்க்க அது தயார் என்றும் கான் சொன்னார்.
“நான் குளுவாங்கில் பிறந்து வளர்ந்தவன். அதன் கலாச்சாரத்தை, வாழ்க்கைமுறையை அறிந்தவன்.
“குளுவாங் மக்களைப் பற்றி முன்கூட்டியே ஒரு தீர்மானத்துக்கு வர விரும்பவில்லை. ஆனால், சமூகப் பணியில் நாட்டம் கொண்டவர்கள், தேசிய அரசியலில் தெளிவான நிலைபாடு கொண்டவர்கள் நிச்சயம் வரவேற்கப்படுவார்கள்”, என்றாரவர்.
2008-இல் குளுவாங்கை 3,781 வாக்குகள் பெரும்பான்மையில் வென்றது மசீச. ஆனால், அப்பெரும்பான்மை 2004-இல் அது பெற்ற 18,698 வாக்குகள் பெரும்பான்மையுடன் ஓப்பிடும்போது மிகவும் குறைந்திருந்தது.
கான், 2008-இல் மெங்கிபோல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு டிஏபி-இடம் 1,281 வாக்குகளில் தோற்றார்.
ஜோகூரில். சீன வாக்காளர்களின் ஆதரவு தன் பக்கம் திரும்பும் என டிஏபி தப்புக்கணக்குப் போட்டிருக்கிறது என கான் குறிப்பிட்டார்.
“நாங்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வந்து தலையைக் காண்பிப்பவர்கள் அல்ல. நீண்ட காலமாகவே இங்கிருந்து உழைப்பவர்கள்”.
நிலம், வழிபாட்டு இல்லங்கள் தொடர்பான பல விவகாரங்களுக்கு மசீச வெற்றிகரமாக தீர்வு கண்டிருப்பதாக கான் கூறினார்.
என்றாலும், டிஏபி திடீரென அதன் “தளபதிகளை”க் களமிறக்குவதால் மசீசவும் அதன் வியூகங்களை மாற்றி அமைக்க வேண்டியுள்ளது என்பதை கான் ஒப்புக்கொண்டார். ஆனால், அதை அவர் விவரிக்கவில்லை.
“ஜோகூர், இஸ்கண்டர் மேம்பாட்டு மண்டலம்போல் பல மாற்றங்களைக் கண்டு வருகிறது. இது ஜோகூருக்கு பரபரப்பூட்டும் மேம்பாடாகும். மக்கள் இதற்கெல்லாம் முன்னுரிமை கொடுப்பார்கள்”, என்றாரவர்.