பக்காத்தான் ரக்யாட்டின் தேர்தல் கொள்கை அறிக்கையைக் குறைசொல்லும் இரண்டாவது நிதி அமைச்சர் அஹமட் ஹுஸ்னி ஹனட்ஸ்லா வெறுமனே குறைசொல்லுதல் போதாது அதற்கான ஆதாரங்களை முன்வைக்கத் தயாரா என மாற்றரசுக் கட்சியான பிகேஆர் சவால் விடுத்துள்ளது.
“புள்ளிவிவரங்களை முன்வைத்து அலசி ஆராயத் தயாரா என்று அவருக்குச் சவால் விடுக்கிறோம்”, என்று கட்சியின் வணிக, தொழில் பிரிவுத் தலைவர் வொங் சென் இன்று பெட்டாலிங் ஜெயாவில் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.
கடந்த வாரம், ஹுஸ்னி (இடம்), பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கை நாட்டின் பற்றாக்குறையை 11.5 விழுக்காடாகவும் தேசிய கடனை 62.1 விழுக்காடாகவும் உயர்த்திவிடும் என்று கூறியிருந்தார்.
“ஆனால், இன்றுவரை அவர் அதற்கான ஆதாரங்களைக் காண்பிக்கவில்லை”, என்று கட்சியின் வியூக இயக்குனர் ரபிஸி ரம்பி கூறினார்.
“எதையாவது சொல்லி வைத்தால் போதும். ஊடகங்களில் வரும், மக்கள் நம்பி விடுவார்கள் என்று எதிர்பாக்கிறீர்கள். அது அந்தக் காலம். இப்போது எடுபடுவதில்லை”.
விழிப்புற்ற பொதுமக்கள், எதைச் சொன்னாலும் அதற்குச் சான்றாதாரங்களைக் கோருகிறார்கள் என்றார் ரபிஸி.
பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கையுடன் அதற்கான ஆதாரங்களையும் முன்வைத்து வந்துள்ளது என்று ரபிஸி (வலம்) கூறினார். பக்காத்தானின் கொள்கை அறிக்கைமீது பிஎன் வாதமிட முன்வரும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.
“வாதத்துக்கு அவர்களை அழைப்பது வீண் முயற்சி”, என்றாரவர்.
இருந்தாலும் இரண்டாவது நிதி அமைச்சர், தம் கூற்றுக்கு ஆதரவாக சில உண்மைகளையும் புள்ளிவிவரத்தையும் காண்பிப்பார் என்று எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.
பக்காத்தான் அதன் தேர்தல் கொள்கை அறிக்கையை பிப்ரவரி மாதம் வெளியிட்டது. அதில் பல நன்மைகளுக்கு, சீரமைப்புகளுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.
அதைக் கடுமையாகக் குறைகூறிய பிஎன் தலைவர்கள் பக்காத்தான் கொள்கைகளால் நாடு “நொடித்துப்போகும்” என்று கூறி வருகின்றனர்.