பக்காத்தான், கார்களைத் தொடர்ந்து மலிவான மோட்டார் சைக்கிள்களுக்கும் வாக்குறுதி அளிக்கிறது

rafiziபுத்ராஜெயாவை பக்காத்தான் ராக்யாட் கைப்பற்றினால் கார்களுக்கான கலால் வரியைக் குறைக்கப் போவதாக அந்த எதிர்த்தரப்புக் கூட்டணி ஏற்கனவே வாக்குறுதி அளித்துள்ளது.

இப்போது மோட்டார் சைக்கிள்களுக்கான கலால் வரியைக் குறைப்பதாகவும் அது உறுதி அளித்துள்ளது.

“மலேசியாவில் வேலை செய்யும் வர்க்கத்தினர் கார்களை வாங்குவதை விரும்புவதால் போக்குவரத்துக்கு
மோட்டார் சைக்கிள்களை நம்பியிருக்கின்றவர்கள் பெரும்பாலும் மறக்கப்பட்டு விடுகின்றனர்,” என பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் இன்று நிருபர்களிடம் கூறினார்.

பிஎன் அரசாங்கத்தின் ‘பின்னோக்கிய’ வரி விதிப்பு முறை பொருளாதாரத்தில் மேல் தட்டில் இருப்பவர்களைக்
காட்டிலும் சமூகத்தில் அடித்தட்டில் இருப்பவர்களையே அதிகம் பாதிக்கிறது என அவர் சொன்னார்.

எஞ்சின் அளவைப் பொறுத்து மோட்டார் சைக்கிள்களுக்கு விதிக்கப்படும் 20 முதல் 30 விழுக்காடு கலால் வரி
வசதி குறைந்தவர்களுக்கு சுமையாக இருப்பதாக ராபிஸி தெரிவித்தார்.rafizi1

அதன் விளைவாக மோட்டார் சைக்கிள் விலைகள் அதிகமாக இருக்கின்றன. வங்கிகள் அவற்றுக்கு கடனுதவி  செய்வதில்லை என்பதால் விற்பனையாளர்கள் தரும் கடன்களை நாட வேண்டியுள்ளது. அந்தக் கடன்களுக்கு மிக அதிகமாக வட்டி விதிக்கப்படுகின்றது.

கார்களுக்கான கலால் வரியைக் குறைக்கும் பக்காத்தான் திட்டத்தைப் போல மோட்டார் சைக்கிள்களுக்கான  கலால் வரியை ஆண்டு 20 விழுக்காடு வீதம் குறைத்து ஐந்து ஆண்டுகளில் முழுமையாக அகற்ற பக்காத்தான் எண்ணம் கொண்டுள்ளதாக ராபிஸி சொன்னார்.

அவ்வாறு குறைப்பதால் ஏற்படக் கூடிய வருமான இழப்பு அந்நியக் கார்களை இறக்குமதி செய்வதற்கான ஏபி
அனுமதிகளை ஏலத்திற்கு விடுவதின் மூலம் சரிக்கட்டப்படும்.

கலால் வரி ஐந்து ஆண்டுகளில் குறைக்கப்படுவதால் அரசாங்க நிதிகள் மீது அதன் தாக்கம் மிகவும் குறைவாக
இருக்கும் என்றும் ராபிஸி சொன்னார்.

புத்ராஜெயாவை தான் கைப்பற்றினால் அரசாங்க வருமானத்தை அதிகரிக்க ஏபி அனுமதிகள் ஏலத்துக்கு
விடப்படும் என்றும் மலிவான கார்களை வழங்க கலால் வரியை ரத்துச் செய்யப்படும் என்றும் பக்காத்தான்
அறிவித்துள்ளது.