கேலாங் பாத்தாவில் போட்டியிடுமாறு டாக்டர் மகாதீருக்கு கிட் சியாங் சவால்

kit siangயாருடைய ‘அரசியல் புதைகுழி’ என்பதை முடிவு செய்ய கேலாங் பாத்தாவில் போட்டியிடுமாறு டிஏபி  நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு சவால்  விடுத்துள்ளார்.

கேலாங் பாத்தாவில் அம்னோ/பிஎன் பக்காத்தான் ராக்யாட்டுடன் மோதுவதில் உதவுவதற்காக வந்துள்ள அந்த  முன்னாள் பிரதமர், டிஏபி மூத்த தலைவருடைய அரசியல் வாழ்க்கைக்கு முடிவு கட்டுமாறு ஜோகூர் மக்களைக்  கேட்டுக் கொண்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் லிம் அந்த சவாலை விடுத்துள்ளார்.

‘உங்களுக்குத் தெரிந்த பிசாசு’ என தம்மையே வருணித்துக் கொண்டுள்ள மகாதீர் உண்மையிலேயே
அரசியலிலிருந்து ஓய்வு பெற்று விட்டாரா என ஈப்போ தீமோர் எம்பி-யுமான லிம் வினவினார்.

“அதற்கான பதில் ‘இல்லை’ என்பது அனைவருக்கும் நன்கு தெரியும். உண்மையில் மகாதீர் முன்னைக்
காட்டிலும் ‘திரைக்குப் பின்னால்’ மிகவும் வலிமையானவராகக் காணப்படுகின்றார். 22 ஆண்டுகளுக்கு பிரதமராக  இருந்த போது இருந்த அதே நிலையில் இப்போதும் அன்றாடம் அறிக்கைகளை வெளியிடுகிறார் அல்லது  அம்னோ/பிஎன் தலைமைத்துவத்திற்குச் ‘சட்டத்தை’ வகுக்கும் சொற்பொழிவுகளை நிகழ்த்துகிறார்.”

“2008 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மகாதீர் பிரதமராக இருந்த அப்துல்லா அகமட் படாவியை வீழ்த்தினார்.
13வது பொதுத் தேர்தல் சிறந்த அடைவு நிலையைப் பெறா விட்டால் நஜிப் அப்துல் ரசாக்கையும் பதவி
இறக்கப் போவதாகவும் அவர் வெளிப்படையாக மருட்டியுள்ளார். மகாதீர் தான் இப்போது பிரதமரைப் ‘போல’
செயல்படுகிறார் என்றால் மிகையில்லை. மகாதீரைக் கண்டு நஜிப் மிகவும் அஞ்சுகிறார். நஜிப்பின் அரசியல்
தலைவிதியை இன்னும் மகாதீர் நிர்ணயம் செய்ய முடியும் எனத் தோன்றுகிறது.”

2003ம் ஆண்டு ஒய்வு பெற்ற போதிலும் மகாதீர் இன்னும் மலேசிய, அம்னோ அரசியலில் தீவிர ஈடுபாடு
கொண்டுள்ளதாகவும் லிம் சொன்னார்.

“அதனால் நாடாளுமன்றத் தேர்தல்களில் கேலாங் பாத்தாவில் போட்டியிட வருமாறு நான் மகாதீரை
அழைக்கிறேன். யாருடைய அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வர வேண்டும் என்பதையும் கேலாங் பாத்தா
என்னுடைய அரசியல் ‘புதைகுழியா’ அல்லது அவருடைய அரசியல் ‘புதைகுழியா’ என்பதையும் ஜோகூர்
மக்கள் தீர்மானிக்கட்டும்.”kit siang1

“நான் என்னுடைய அரசியல் வாழ்க்கையை கேலாங் பாத்தா மக்களிடம் சமர்பிக்கத் தயாராக இருக்கிறேன்.
கேலாங் பாத்தா மலேசிய சமூகத்தை பிரதிபலிக்கும் தொகுதியாகும். அதில் சீன வாக்காளர்கள் 53
விழுக்காட்டினர், மலாய் வாக்காளர்கள் 33 விழுக்காட்டினர், இந்திய வாக்காளர்கள் 12 விழுக்காட்டினர்.
கேலாங் பாத்தா வாக்காளர்களிடம் தமது அரசியல் வாழ்க்கையைச் சமர்பிக்க மகாதீர் தயாராக இருக்கிறாரா ?”
என அவர் வினவினார்.

கேலாங் பாத்தா எப்போதும் பிஎன் கோட்டையாகும். கடந்த பொதுத் தேர்தலில் ஆளும் கூட்டணி அங்கு
9,000 வாக்குகள் பெரும்பான்மையில் வென்றது. 2004ல் அது 31,666 வாக்கு பெரும்பான்மையாக இருந்தது
என்றும் லிம் சொன்னார்.

“கடந்த பொதுத் தேர்தலில் 21,00 வாக்குகளுக்கு மேலான பெரும்பான்மையில் வெற்றி பெற்ற ஈப்போ தீமோர்
தொகுதியிலிருந்து தாம் கேலாங் பாத்தாவில் போட்டியிட வந்து ‘வெட்டும் களத்தில்’ என் தலையை
வைத்துள்ளேன்.”

“கடந்த பொதுத் தேர்தலில் கேலாங் பாத்தா முடிவுகள் நன்றாக இருக்கும் போது மகாதீர் அங்கு மகத்தான
பெரும்பான்மையுடன் வெற்றி பெற முடியும்,”என லிம் சொன்னார்.

“ஆகவே நான் கேலாங் பாத்தாவில் மகாதீருக்காக காத்திருக்கிறேன்,” என அவர் சவால் விடுத்தார்.

கேலாங் பாத்தா நாடாளுமன்றத் தொகுதியில் லிம் போட்டியிடுவார் என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார்
இப்ராஹிம் அண்மையில் அறிவித்தார்.

அம்னோ/பிஎன் கோட்டை எனக் கருதப்படும் ஜோகூரில் பக்காத்தான் ராக்யாட் நுழைவதற்கு உதவியாக லிம்
அங்கு களம் இறங்குகிறார்.

கடந்த பொதுத் தேர்தலின் போது பேராக் மாநிலத்தில் பக்காத்தான் பிரச்சாரத்துக்கு லிம் தலைமை தாங்கினார்.
மாநில அரசாங்கத்தைப் பிடிப்பதிலும் பக்காத்தான் வெற்றி பெற்றது.

கேலாங் பாத்தா பிகேஆர் இடம் என்றாலும் பக்காத்தான் தொடங்கியுள்ள தாக்குதலுக்கு டிஏபி நாடாளுமன்றத்
தலைவர் உதவி செய்யும் பொருட்டு அந்தத் தொகுதியை அவருக்கு விட்டுக் கொடுக்க தயாராக இருப்பதாகவும்  அன்வார் சொன்னார்.

என்றாலும் கேலாங் பாத்தாவில் லிம் நிறுத்தப்படுவது பிரச்னைகளை உருவாக்கியுள்ளது. காரணம் அந்த
இடத்துக்கு ஜோகூர் பிகேஆர் தலைவர் சுவா ஜுய் மெங்-கும் குறி வைத்திருந்ததாகக் கூறப்பட்டிருந்தது.