இந்தியர்களுக்கான டிஏபி பெருந்திட்டத்தை சாமிவேலு சாடுகிறார்

samyஇந்திய சமூக வாக்குகளைப் பெறுவதற்காக கடைசி நேரத்தில் சலுகைகளை அறிவிப்பதின் மூலம் அந்த  சமூகத்தை ஏமாற்ற முயலுவதாக முன்னாள் மஇகா தலைவர் எஸ் சாமிவேலு சாடியிருக்கிறார்.

மலேசிய இந்தியர்களுடைய சமூக பொருளாதார நிலையை உயர்த்தும் பொருட்டு கடந்த ஞாயிற்றுக் கிழமை  டிஏபி அறிவித்த ‘கேலாங் பாத்தா பிரகடனம்’ என அழைக்கப்பட்ட 14 அம்சத் திட்டம் பற்றி அவர் நேற்று  விடுத்த ஒர் அறிக்கையில் கேள்வி எழுப்பினார்.

இந்திய சமூகத்துக்கான பெருந்திட்டம் எனக் கூறப்பட்ட அதனை அறிவிப்பதற்கு டிஏபி மட்டும் மேற்கொண்டுள்ள முயற்சி, இந்த நாட்டில் உள்ள இந்தியர்களுடைய நல்வாழ்வில் பக்காத்தான் முழுமையாக அக்கறை காட்டவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுவதாக அவர் சொன்னார்.

“அது பக்காத்தானுடைய கடமையாக இருக்கும் போது ஏன் டிஏபி மட்டும் இந்தியர்களுக்கு தனியாக பெருந்திட்டத்தை வெளியிட வேண்டும் ? அது இந்திய சமூகத்துக்கு உதவுவதில் பக்காத்தான் உண்மையாக இல்லை என்பதை அது காட்டுகின்றது,” என சாமிவேலு அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

டிஏபி இந்திய சமூகத்துக்காக திடீரென ஏதோ ஒன்றை உருவாக்கியிருப்பது, எதிர்த்தரப்புக் கூட்டணி கடைப்பிடிக்கும் இரட்டைத் தரத்தைப் பிரதிபலிக்கின்றது என்றும் அவர் சொன்னார்.

“இந்தியர்களுக்கு எதனையும் வழங்காத பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கைக்கு என்ன நேர்ந்தது,” என்றும் அவர் வினவினார்.

பக்காத்தானுக்கு இந்தியர்களுடைய ஆதரவு குறைந்து வருவதை உணர்ந்துள்ள டிஏபி அவர்களைக் கவருவதற்குக் கடைசி நேரத்தில் ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளது என்றும் சாமிவேலு குறிப்பிட்டார்.

“அது சரி அல்ல. இந்தியர்களுக்கு தாங்கள் செய்ய விரும்புவதில் அது உண்மையாக நடந்து கொள்ள வேண்டும். இந்தியர்களைக் கவருவதற்காக கடைசி நேரத்தில் வெளியில் வர வேண்டாம். இந்தியர்களுக்கு என்று டிஏபி அறிவித்துள்ள பெருந்திட்டம் பக்காத்தான் தலைமைத்துவத்தின் ஆதரவைப் பெறவில்லை.”

“பக்காத்தான் தலைமைத்துவத்தின் ஆதரவை அது பெற்றிருந்தால் டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங் மட்டும் ஏன் அதனை அறிவிக்க வேண்டும் ? இந்தியர்களுக்கு உதவுவதில் பக்காத்தான் தலைமைத்துவம் உண்மையாக இல்லை என்பதையே அது காட்டுகின்றது,” என்றார் அவர்.

‘பக்காத்தானின் வெற்று வாக்குறுதிகள்’

அதே வேளையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலைமைத்துவத்தின் கீழ் பிஎன் இந்திய சமூகத்துக்கு நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கை திட்டத்தை வெளியிட்டுள்ளது என சாமிவேலு வலியுறுத்தினார். அந்த  திட்டம் இப்போது அமலாக்கப்படுகின்றது என்றார் அவர்.

இந்தியர்களுடைய வாக்குகளைப் பெறுவதற்காக வெற்று வாக்குறுதிகளை வழங்கும் பக்காத்தானைப் போல அல்லாது இந்திய சமூகத்துக்கு பிரதமர் கொண்டு வந்துள்ள மேம்பாடுகளை நாம் பார்க்கிறோம்.”

“இந்திய சமூகம் இது போன்ற தந்திரங்களுக்கு பலியாகாது. பிஎன் அரசாங்கத்தின் நடவடிக்கை திட்டம் மூலம்  இந்தியர்கள் நன்மை அடைந்துள்ளனர். வரும் தேர்தலில் அவர்கள் பிஎன் -னுக்கு வாக்களித்தால் தொடர்ந்து  நன்மைகளை அனுபவிக்க முடியும்,” என சாமிவேலு மேலும் கூறினார்.

31 ஆண்டுகள் மஇகா தலைவராக பதவி வகித்த பின்னர் 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்தப்  பொறுப்பிலிருந்து விலகிய சாமிவேலு, 2011ம் ஆண்டு அமைச்சர் தகுதியுடன் இந்தியா, தென்கிழக்காசியாவுக்கு அடிப்படை  வசதிகள் மீதான சிறப்புத் தூதராக நியமிக்கப்பட்டார்.

அவர் தற்போது சுங்கை சிப்புட் தொகுதிக்கான பிஎன் தலைவராக இருக்கிறார். எட்டுத் தவணைக் காலத்துக்கு சுங்கை சிப்புட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவரை 2008 தேர்தலில் பிஎஸ்எம் மலேசிய சோஷலிசக் கட்சியின் டாக்டர் மைக்கல் ஜெயகுமார் மிகவும் குறுகிய 1,821 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடித்தார்.