பொதுத் தேர்தல் மீதான விவாத அரங்கில் பிஎன் பக்காத்தான் இளம் தலைவர்கள் மோதுவர்

forum13வது பொதுத் தேர்தல் பற்றி ஏப்ரல் 10ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மூன்று மணி நேர விவாத அரங்கில்  பிஎன், பக்காத்தான் ராக்யாட் ஆகியவற்றைச் சேர்ந்த நான்கு இளம் தலைவர்கள் கலந்து கொள்வர்.

CPPS எனப்படும் பொது, கொள்கை ஆய்வு மய்யம் ஏற்பாடு செய்யும் அந்த நிகழ்வு யூ டியூப் வழி நேரடியாக
அஞ்சல் செய்யப்படும்.

சிந்தனைக் களஞ்சியமான அஸ்லி என அழைக்கப்படும் ஆசிய வியூக, தலைமைத்துவக் கழகத்தின் கீழ் CPPS
இயங்குகின்றது.

“பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் தங்கள் கூட்டணி அமலாக்க எண்ணியுள்ள முக்கியமான கொள்கைகள்
பற்றியும் மற்ற முக்கியமான விஷயங்கள் பற்றியும் அந்த இளம் தலைவர்கள் பேசுவதைக் கேட்பதற்கு அது
நல்ல வாய்ப்பு,” என அஸ்லி தலைமை நிர்வாக அதிகாரி மைக்கல் இயோ இன்று கோலாலம்பூரில் கூறினார்.

“13வது பொதுத் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கக் கூடிய பிரச்னைகளை அவர்கள் விவாதிப்பர்.”

அம்னோ உச்ச மன்ற உறுப்பினரான சைபுடின் அப்துல்லா, மசீச உதவித் தலைவர் கான் பிங் சியூ ஆகியோர்
பிஎன் சார்பிலும் பக்காத்தான் சார்பில் டிஏபி தேர்தல் வியூகவாதி லியூ சின் தொங்-கும் பாஸ் வியூகவாதி
முஜாஹிட் யூசோப் ராவா-வும் அதில் கலந்து கொள்வர்.

“நாங்கள் வேண்டுமென்றே அரசியல் கட்சிகளின் தலைவர்களிடமிருந்து ஒதுங்கியுள்ளோம். காரணம் இரு
தரப்பையும் சேர்ந்த இளம் தலைவர்களுடைய கருத்துக்களை நாங்கள் செவிமடுக்க விரும்புகிறோம்,” என
இயோ விளக்கினார்.

அந்த நால்வரும் இரண்டாம் நிலை தலைமைத்துவத்தைப் பிரதிநிதிக்கின்றனர். அவர்களுடைய எண்ணங்கள்
13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அரசியல் வடிவமைப்பை வகுக்க உதவக் கூடும் என்றார் அவர்.

மொத்தம் 350 பேர் அந்த நிகழ்வில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது என CPPS இயக்குநர் இங்
யீன் சீன் கூறினார். அதில் 100 இடங்கள் இரண்டு தரப்பையும் சார்ந்த தலா 50 பேருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன
என்றார் அவர்.

இதனிடையே அன்றாடம் யூ டியூப் வழியாக இரண்டு மில்லியன் மலேசியர்கள் வீடியோக்களை பார்ப்பதாக யூ
டியூப் மலேசியாவின் தொடர்பு பொது உறவுப் பிரிவுத் தலைவர் ஜெப்ரி யூசோப் தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்திற்கு இணையத்தை அதிக அளவில் பயன்படுத்துவதாகவும் அவர்
சொன்னார்.