டிஏபி: தேர்தல் ஆணைய விதி முறை திடீரென மாற்றப்பட்டதால் வாக்காளர் பதிவு பாதிப்பு

இசி என்ற தேர்தல் ஆணையம் வாக்காளர் பதிவுக்கான விதிமுறை திடீரென மாற்றியிருப்பது குறித்து டிஏபி கேள்வி எழுப்பியுள்ளது.

அந்த புதிய விதிமுறை ‘நியாயமற்றது’ என்றும் புதிய வாக்காளர்களை பதிவு செய்யும் தனது முயற்சிகளுக்குப் பாதகமாக அமையும் என்றும் அது கூறியது.

திடீரென் விதிமுறை மாற்றப்பட்டதால் 500 புதிய பதிவுகள் ‘தொங்கு நிலையில்’ இருப்பதாக டிஏபி குறிப்பிட்டது.

கூட்டரசுப் பிரதேச இசி அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட பதிவு பாரங்கள், பதிவு செய்து கொண்டவர்களுடைய அடையாளக் கார்டு பிரதிகள் இல்லாததால் நிராகரிக்கப்பட்டுள்ளது என்றும் தனக்கு ஏற்கனவே அந்த புதிய விதி பற்றித் தெரிவிக்கப்படவில்லை என்றும் அது கூறியது.

அந்தப் புதிய விதிமுறை கடந்த ஆறு மாதங்களில் முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் இசி மேற்கொண்ட நான்காவது விதி முறை மாற்றமாகும். இசி நடவடிக்கை மறைவுத் தாக்குதலுக்கு ஒப்பாகும் என்றும் அது வருணித்தது.

இதற்கு முன்னர் ஒவ்வொரு பாரத்துடனும் அறிக்கை ஒன்று இணைக்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளும் குறிப்புடன் இசி பதிவு பாரங்களை திருப்பி அனுப்பியது. அந்த அறிக்கை என்பது நீண்ட காலம் பிடிக்கும் விஷயமாகும். ஒவ்வொரு பதிவுக்கும் அதனைத் திரும்பத் திரும்ப எழுத வேண்டியிருந்தது. அத்துடன் அந்தப் பாரத்தில் பத்திகள் சிறிதாக இருந்ததால் பூர்த்தி செய்வதும் சிரமமாக இருந்தது.

பின்னர் இசி வாக்காளர் பதிவு பாரங்களையே மாற்றி விட்டதாக டிஏபி-க்குத் தெரிவிக்கப்பட்டது. அதனால் கட்சித் தொண்டர்கள் பாரங்களை மீண்டும் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அந்தப் புதிய விதிமுறைகளை பின்பற்றி பூர்த்தி செய்து அனுப்பப்பட்ட பாரங்களே அண்மையில் நிராகரிக்கப்பட்டன.