சிலாங்கூர் மந்திரி புசார் காலித் போர்ட் கிளாங்கிற்கு செல்லக் கூடும்

khalidவரும் தேர்தலில் சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் தமது ஈஜோக் தொகுதியை தக்க வைத்துக்  கொள்ளப் போட்டியிட மாட்டார் என்றும் அவர் பெரும்பாலும் போர்ட் கிளாங்கில் நிறுத்தப்படலாம் என்றும்  சொல்லப்படுகின்றது.

ஈஜோக்கில் போட்டியிட அப்துல் காலித் முடிவு செய்தால் அவர் அதனைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல்
போகலாம் என பிகேஆர் தேர்தல் குழுவுக்கு அணுக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

மந்திரி புசார் என்னும் முறையில் அவருக்கு வேலைச் சுமை அதிகமாக இருந்ததால் ஈஜோக்கிற்கு அடிக்கடி
செல்ல இயலாமல் போனதாக அவை தெரிவித்தன.

2008 தேர்தலில் ஈஜோக்கில் 1,920 வாக்குகளில் அம்னோவின் முகமட் சயூட்டி சைட் அப்துல் காலித்
தோற்கடித்தார்.

அந்தத் தொகுதியில் மலாய் வாக்காளர்கள் 50 விழுக்காட்டினர், இந்தியர்கள் 32 விழுக்காட்டினர், சீனர்கள் 18
விழுக்காட்டினர்.

அப்துல் காலித்துக்கு மாற்று ஏற்பாடுகள் பரிசீலிக்கப்படுவதாகவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன. அவற்றுள்  போர்ட் கிளாங் தொகுதியும் ஒன்றாகும்.

அந்தத் தொகுதியில் 2008ல் பிகேஆர் வேட்பாளர் பத்ருல் ஹிஷாம் அப்துல்லா வெற்றி பெற்றார். ஆனால்
ஓராண்டுக்கு பின்னர் அவர் கட்சியை விட்டு விலகி அம்னோவில் சேர்ந்தார்.

பத்ருல் தமது தொகுதியை நன்றாகக் கவனிக்கவில்லை. அதனால் அந்தப் பொறுப்பை டிஏபி கிள்ளான்
உறுப்பினர் சார்ல்ஸ் சண்டியாகோ அந்தச் சுமையை ஏற்றுக் கொண்டிருந்தார்.

2008ல் பத்ருல் போர்ட் கிளாங் தொகுதியில் 4,407 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

அந்தத் தொகுதியில் 51 விழுக்காடு மலாய் வாக்காளர்கள், 28 விழுக்காடு சீனர்கள், 18 விழுக்காடு இந்தியர்கள்.

என்றாலும் தம்மைப் பொறுத்த வரையில் அப்துல் காலித் ஈஜோக்கில் தான் போட்டியிடுவார் என அவருடைய
அரசியல் செயலாளர் பாக்கே ஹுசின் கூறியுள்ளார்.

அப்துல் காலித் வேறு இடங்களில் போட்டியிடுவது குறித்து உயர் தலைமைத்துவத்திடமிருந்து எந்தத் தகவலும்  தமக்கு வரவில்லை என அவர் சொன்னார்.