சரவாக் முதலமைச்சர் அப்துல் தயிப் மஹ்மூட், மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) ஊழல் விசாரணை என்ற பெயரில் தம்மைப் “பழிவாங்க முனைவதாக”க் கூறி “தொல்லைமிக்க, நேர்மையற்ற” அந்த ஆணையத்துடன் ஒத்துழைக்கப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
“அவர்களுடன் (எம்ஏசிசி) ஒத்துழைப்பு இல்லை. அவர்கள் தொல்லைதான் கொடுத்து வந்துள்ளனர்……நேர்மையாக நடந்துகொண்டதில்லை”. இன்று கோலாலும்பூரில் பிஎன் உச்சமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் தயிப் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறினார்.
அந்த ஊழல்தடுப்பு ஆணையம் தம்மீது விசாரணை நடத்துவது குறித்து அஞ்சவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
“என்னைப் பழி வாங்கட்டும்…..நான் பயப்படவில்லை”, என்றாரவர்.
ஊழல் விசாரணை என்று வந்தால் அது தேர்தலில் பிஎன்னுக்கு பாதகமாக அமையுமே என்றதற்கு அதை அவர் மறுத்தார்.
“என்னால் பாதகமா? கடந்த தேர்தலில் மூன்றில் இரண்டு பங்குக்கும் மேலான பெரும்பான்மையைப் பெற்றேன். அதையெல்லாம் அவர்கள்(வாக்காளர்கள்) பொருட்படுத்த மாட்டார்கள்”, என நீண்டகாலமாக சரவாக் முதலமைச்சராகவுள்ள தயிப் கூறினார்.
எம்ஏசிசி விசாரணையால் ஆதரவு குறையாது
எம்ஏசிசி விசாரணையால் சரவாக் மக்களிடம் தமக்குள்ள ஆதரவு குன்றிவிடாது என்றும் அவர் சொன்னார்.
கடந்த மாதம் பன்னாட்டு ஊழல் கண்காணிப்பு அமைப்பான Global Witness சரவாக் வெட்டுமரத் தொழில் ஊழல் என்று ஒரு காணொளியை வெளியிட்டிருந்தது.
அக்காணொளியில் ஒரு நடிகரை வெட்டுமரத் தொழில் முதலீட்டாளர்போல் அது நடிக்க வைத்திருந்தது. அந்த நடிகர் தயிப்பின் நெருங்கிய உறவினர்களுடனும் தயிப்புக்கு வேண்டப்பட்டவர்கள் என்று கூறிக்கொண்ட சிலருடனும் உரையாடுவது அக்காணொளியில் பதிவாகி இருந்தது. அதில் அவர்கள் பூர்வகுடிகள் வசிக்கும் சில பகுதிகளை அவருக்கு விற்க முன்வருகிறார்கள். அத்துடன் வரி கொடுக்காமல் ஏமாற்றுவது எப்படி என்பதையும் அவருக்கு எடுத்துக் கூறுகிறார்கள்.இவை எல்லாமே அதில் பதிவாகி இருந்தன. அக்காணொளி அல்-ஜசீரா, மலேசியாகினி தொலைக்காட்சிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது.
அதைப் பார்க்கையில் தயிப்பின் உறவினர்கள் பூர்வகுடி மக்களின் உரிமைகள் பற்றிக் கவலைப்படுபவர்களாக தெரியவில்லை.
ஆனால், தயிப் அந்த உரையாடலைப் பொருட்படுத்தவில்லை. தனிப்பட்டவர்கள் தொழில் ஆதாயம் கருதி தம்மிடம் பெரும் செல்வாக்கு இருப்பதாகக் “கூறிக்கொள்வதெல்லாம் வழக்கமான ஒன்றுதான்” என்றவர் குறிப்பிட்டார்..