ஜோகூர் பிகேஆர் தலைவர் சுவா ஜுய் மெங், கேலாங் பாத்தா தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒதுங்கி விட்டதாகக் கூறப்பட்டது.
ஆனால் அவர் இன்னும் பிகேஆர் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டுள்ளதாக ஒரு வட்டாரம் தெரிவித்தது.
பிகேஆர் உதவித் தலைவருமான அவர் போட்டியிடும் தொகுதியைக் கட்சித் தலைவர்கள் இன்னும் முடிவு
செய்யவில்லை என்றாலும் இன்று பிற்பகல் பக்காத்தான் தலைமைத்துவ மன்றக் கூட்டத்தில் அது முடிவு செய்யப்படும் எனக் கருதப்படுகின்றது.
அம்னோ கோட்டையெனக் கருதப்படும் ஜோகூரில் பிகேஆர் கட்சியின் வியூகங்கள் குறித்து நாளை சுவா
பிகேஆர் தலைமையகத்தில் நிருபர்களுக்கு விளக்குவார் என அந்த வட்டாரம் குறிப்பிட்டது.
பெங்கெராங் பெட்ரோனாஸ் சுத்திகரிப்பு, பெட்ரோல் இரசாயன ஒருங்கிணைக்கப்பட்ட மேம்பாட்டுத் திட்டம்
பற்றி நடைபெற்ற ஜோகூர் செராமா ஒன்றில் தாம் கலந்து கொண்டது குறித்து சுவா இன்று ஒர் அறிக்கை
விடுத்தார்.
டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங், கேலாங் பாத்தா வேட்பாளர் என அறிவிக்கப்பட்ட
பின்னர் பல வாரங்களாக சுவா எந்த நிகழ்விலும் பங்கு கொள்ளாமல் இருந்து வந்தார்.
“சுவா போட்டியிடும் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றாலும் அவர் பிகேஆர் போராட்டத்தில் கடப்பாடு
கொண்டுள்ளார்,” என அடையாளம் கூற விரும்பாத கட்சி உள் வட்டாரம் ஒன்று தெரிவித்தது.
இரண்டு நாட்களுக்கு முன்பு சுவா பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமைச் சந்தித்தாகத் தெரிகிறது.
சுவாவுக்கு பொருத்தமான இடம் ஜோகூரில் வழங்கப்படும் என பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி
நேற்று கூறினார்.
சுவா கூலாய், சிகாமட் அல்லது பக்ரியில் நிறுத்தப்படலாம் என்ற ஊகங்களை அஸ்மின் அறிக்கை
உறுதிப்படுத்தியுள்ளது.
பக்ரி, சுவா மசீச உதவித் தலைவராக இருந்த போது களமிறங்கிய பாரம்பரியத் தொகுதி ஆகும்.
2008ல் டிஏபி போட்டியிட்ட சிகாமட் தொகுதி தற்போது மஇகா துணைத் தலைவர் எஸ் சுப்ரமணியம் வசம்
உள்ளது. மனித வள அமைச்சருமான அவர் அங்கு 2,991 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.