அன்வார்: அஜிஸா தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளார்

anwarபிகேஆர் தலைவருமான தமது துணைவியார் வான் அஜிஸா வான் இஸ்மாயில் 13வது பொதுத் தேர்தலில்  போட்டியிட மாட்டார் என்பதை பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன் வழி அஜிஸா தேர்தலில் போட்டியிடுவாரா மாட்டாரா என்ற ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி  வைக்கப்பட்டுள்ளது.

“நான் சிறையில் இருந்த போது அஜிஸா கூட்டணியைக் குறிப்பாக பிகேஆர் கட்சியை வழி நடத்த முடிந்தது.
அவர் தொடர்ந்து தலைவராக இருப்பார். ஆனால் தேர்தலில் போட்டியிடுவதில்லை என அவர் இப்போது
முடிவு செய்துள்ளார்,” என நேற்று அல் ஜாஸிரா அனைத்துலக தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர்
சொன்னார்.

கட்சியில் உயர் பதவிகளை வகிக்கும் தமது துணைவி, தமது புதல்வியும் பிகேஆர் உதவித் தலைவருமான
நுருல் இஸ்ஸா ஆகியோரைக் கொண்டு அரசியல் வம்சாவளியை தாம் உருவாக்குவதாக
சொல்லப்படுவதையும் அன்வார் அந்தப் பேட்டியில் நிராகரித்தார்.

அன்வார் நாடாளுமன்றத்துக்குச் செல்வதற்காக 2008ம் ஆண்டு ஜுலை மாதம் தமது பெர்மாத்தாங் பாவ் எம்பி
பதவியைத் துறந்த வான் அஜிஸா சிலாங்கூரில் சட்டமன்றத் தொகுதி ஒன்றுக்கு போட்டியிடுவார் என்றும் அந்த  மாநிலத்தை பக்காத்தான் தக்க வைத்துக் கொண்டால் சிலாங்கூர் மந்திரி புசாராக நியமிக்கப்படக் கூடிய
பிகேஆர் வேட்பாளர்களில் அவரும் ஒருவர் எனக் கூறிய வதந்திகளுக்கு அன்வார் பதில் முடிவு கட்டியுள்ளது.