அரசாங்கத்தை மாற்றுவதை கார், காதலன் அல்லது காதலியை மாற்றுவது போல எண்ண வேண்டாம் என வாக்காளர்களை முன்னாள் அம்னோ மகளிர் தலைவி ரபிடா அஜிஸ் எச்சரித்துள்ளார்.
இந்த நாட்டை ஆட்சி புரிய வலுவான அரசாங்கம் தேவை. நாட்டை மேம்படுத்துவதும் வளர்ச்சித் திட்டங்களை அமலாக்குவதும் எளிதானதல்ல என்றார் அவர்.
“ஆகவே தயவு செய்து ‘பரவாயில்லை, மாற்றுங்கள்’ எனச் சொல்ல வேண்டாம். அடக் கடவுளே ! அரசாங்கத்தை மாற்றுவது, கார், காதலன் அல்லது காதலியை மாற்றுவது போன்றது அல்ல,” என நேற்று கோலாலம்பூரில் அம்னோ உச்ச மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அவர் நிருபர்களிடம் கூறினார்.
நாம் தவறான முடிவு செய்தால் நாடு தவறான பாதையில் சென்று விடும் என அந்த கோலா கங்சார் எம்பி சொன்னார்.
தாம் 37 ஆண்டுகள் எம்பி-யாக சேவை செய்துள்ளதால் மற்றவர்களுக்கு வழி விடும் பொருட்டு வரும் பொதுத்
தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என ரபிடா மீண்டும் வலியுறுத்தினார்.
“ஒவ்வொரு அரசியல்வாதியும் தாம் உச்சக் கட்டத்துக்குச் சென்றதும் மற்றவர்களுக்கு வழி வேட வேண்டும் என்பதை உணர வேண்டும்,” எனக் குறிப்பிட்ட அவர், நாட்டுக்கு தமது பங்கை ஆற்றியுள்ளதாகத் தெரிவித்தார்.