எதிர்வரும் பொதுத் தேர்தல் பற்றிய செய்திகளை ‘விருப்பு வெறுப்பின்றி’ வெளியிடுமாறு தேசியப் பத்திரிக்கையாளர் சங்கம் தனது உறுப்பினர்களையும் அனைத்து ஊடகவியலாளர்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.
“நியாயமான, சுதந்திரமான தேர்தலை” உறுதி செய்வதற்கு ஊடகங்களுக்கு துணையாக இருக்குமாறும் அந்த சங்கத் தலைவர் சின் சூங் சியூ நேற்று விடுத்த அறிக்கையில் அரசியல் கட்சிகளைக் கேட்டுக் கொண்டார்.
“அனைவருக்கும் எல்லா வகையான தகவல்களையும் வழங்குவது பத்திரிக்கையாளர்களின் கடமையாகும்.”
ஜனநாயக முறையில் நான்காவது பிரிவாகக் கருதப்படும் ஊடகங்கள், பொது மக்கள் மற்றும் நாட்டின் நலனுக்கு தங்களது கடமைகளைச் செய்வதற்கு எல்லாக் கட்சிகளும் உதவி செய்யும் என அவர் நம்புகிறார்.
அந்தச் சங்கத்தில் 1,500-க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் நிருபர்களாக இருக்கின்றனர்.
“தேசிய ஒற்றுமையையும் மேம்பாட்டையும் அடைவதற்கு விருப்பு வெறுப்பின்றி தகவல்களையும் உண்மைகளையும் பரப்புவதே பத்திரிகையாளர்களின் பங்கு என்பதை நான் நமது உறுப்பினர்களுக்கு வலியுறுத்த விரும்புகிறேன்,” என்றார் அவர்.
வாக்காளர்களுக்கு சம நிலையான தகவல்கள் கிடைக்கா விட்டால் ஜனநாயக நடைமுறைக்கு அடித்தளமாகக் கருதப்படும் நியாயமான தேர்தல்களை பெற முடியாது என்றும் சின் சொன்னார்.
“வாக்காளர்கள் தங்கள் பேராளரையும் கூட்டரசு அரசாங்கத்தையும் மாநில அரசாங்கங்களையும் தெரிவு செய்ய தகவல்களும் செய்திகளும் கருத்துக்களும் உடனடியாகவும் சுதந்திரமாகவும் வழங்கப்பட வேண்டும்.”