பி.கே.ஆரை ஆதரிக்கும் டிவி 2 தமிழ்ச்செய்திப் பிரிவுக்குக் கண்டனம்!

tv2அரசாங்க ஊழியர்கள் என்ற எண்ணம் டிவி 2 தமிழ்ச்செய்திப் பிரிவுக்கு உள்ளதா எனத் தெரியவில்லை. அரசாங்க ஊழியர் என்றால் சில அடிப்படை தகுதிகள் வேண்டும்.

முதலில்  ஒரு நன்றியுள்ள நாயாக வேண்டும். எஜமான் என்ன சொன்னாலும் லொள் லொள் என குரைக்க வேண்டும். வாலை ஆட்டுவதை நிறுத்தவே கூடாது. வால் இல்லையென்றால் தலையை ஆட்டித்தொலையலாம். காரணம் நாமெல்லாம்  நடப்பு அரசாங்கத்துக்குக் கடமை பட்டுள்ளோம்.

சிலர், இப்போதான் நாடாளுமன்றத்த களைச்சிட்டாங்கள… அரசாங்கமே இல்ல… அப்புறம் என்ன அரசாங்க ஆதரவு என கூக்கு மாக்காகக் கேட்கலாம். ஒரு  அரசு அடிமை இப்படியெல்லாம் கேட்பது தவறு. எங்காவது ஒரு நன்றியுள்ள நாய் எஜமானனை எதிர்த்து கேள்வி கேட்குமா? போட்டதை தின்னுட்டு பொத்திக்கிட்டுதானே இருக்கும் .

இப்படி அடிமையோடு இருக்க வேண்டிய இந்த டிவி 2 தமிழ்ச்செய்தி பிரிவு நேற்று (04.04.2013) பி.கே.ஆருக்கு ஆதரவாக நேற்று செய்தி வெளியிட்டதும் கொதித்துப் போனேன்.

najibஅதாவது சுமார்  50 தமிழர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்ட நிகழ்வில் சில முதியவர்களைப் பேட்டிக் கண்டது. அதில் சிலர் பல ஆண்டுகளாக அடையாள அட்டைக்கு அலைந்ததாகவும் இப்போதுதான் கிடைத்தது எனவும் கூறினர். அதிலும் ஒரு மூதாட்டி மிகத் தெளிவாக , “முதலில் தற்காலிக நீல அடையாள அட்டை கிடைத்தது; பிறகு சிவப்பு அட்டை, பிறகு இப்பொழுதுதான் நீல அட்டை கிடைத்தது” என கடுப்போடு கூறினார்.

இந்தச் செய்தியை வெளியிட்டதன் மூலம் டிவி 2 தமிழ்ச்செய்தி பிரிவு என்ன சொல்ல வருகிறது…

– 50 ஆண்டுகாலமாக பாரிசான் அரசு இந்தியர்கள் பிரச்னையை கண்டுக்கொள்ளவில்லை என்கிறதா?

– இப்படியெல்லாம் அலையவிட்டு இந்தியர்கள் நம்பிக்கையை பாரிசான் இழந்துவிட்டதாகக் கூறுகிறதா?

– தேர்தலுக்காக அவசரமாக 50 பேருக்கு அடையாள அட்டை கொடுத்த அரசு ஏன் இதற்கு முன்னமே செய்யவில்லை என்கிறதா?

என்னதான் சொல்லவருகிறது டி.வி 2 தொலைக்காட்சி? இதன் மூலம் இந்தியர்கள் பாரிசானை புறக்கணிக்க வேண்டும் என மறைமுகமாகச் சொல்வதாகவே நான் கருதுகிறேன்.

ஒரு அரசு அடிமைகளான தொலைக்காட்சி நிலையம் இப்படி அரசையே எதிர்ப்பது நியாயமா?

தயவு செய்து இதுபோன்ற செய்திகளைப் போட்டு கொஞ்ச நஞ்சம் இருக்கிற பாரிசானின் ஆதரவையும் கெடுக்க வேண்டாம் எனக்கேட்டுக்கொள்கிறேன்.

நீங்களெல்லாம் அரசாங்க அடிமைகள் என்பதை மறக்க வேண்டாம்!

[ம.நவீன்]