குவான் எங் ‘நல்ல நாள்’ பார்த்து சட்டமன்றத்தைக் கலைத்துள்ளார்

guan engஇன்று பினாங்கு சட்டமன்றக் கலைப்பை அறிவித்த முதலமைச்சர் லிம் குவான் எங், மாநிலத் தேர்தலுக்கு வழிகோல ஒரு“நல்ல நாளில்” அது கலைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

“சட்டமன்றத்தைக் கலைக்க வெள்ளிக்கிழமை பொருத்தமான நாள். ஏனென்றால், இதுதான் வாரத்தின் மிகவும் மங்கலகரமான நாள்”, என்றாரவர்.

தேர்தல் அமைதியாக, எவ்வித இடையூறுமின்றி நடைபெற வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

சட்டமன்றக் கலைப்பை அறிவித்தபோது லிம், “2013” என்பதை அழுத்தமாக உச்சரித்தது இரண்டு நாள்களுக்கு முன்னதாக நாடாளுமன்றம் கலைக்கப்படுவதை அறிவித்த பிரதமர் நஜிப் அப்து ரசாக்குக்கு ஏற்பட்ட தடுமாற்றத்தைக் கிண்டல் செய்வதுபோல் இருந்தது. அதை நினைத்து கூட்டத்தாரும்  சிரித்தனர்.

சட்டமன்றத்தைக் கலைக்க ஆளுனர் அப்துல் ரஹ்மான் அப்பாஸ் இணக்கம் தெரிவித்துள்ளார் என்று குறிப்பிட்ட டிஏபி தலைமைச் செயலாளருமான லிம், ஒரு தவணைக்காலம் மாநிலத்தை ஆளும் வாய்ப்பைக் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

சட்டமன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து இனி, லிம்மின் தலைமையில் அங்கு ஒரு பராமரிப்பு அரசாங்கம் செயல்படும்.