தியான் சுவா சபாவுக்கு நுழைய அனுமதிக்கப்படவில்லை

tianபிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா இன்று சபாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அவர் இன்று  காலை கோத்தா கினாபாலு விமான நிலையத்தில் தரையிறங்கியதும் குடிநுழைவு அதிகாரிகள் அவரைத் தடுத்து  வைத்து தீவகற்ப மலேசியாவுக்குத் திருப்பி அனுப்பினர்.

“இன்று காலை மணி அளவில் கோத்தா கினாபாலுவில் இறங்கினேன். குடிநுழைவுத் துறை என்னை அதன்
முகப்பில் நிறுத்தியது. பின்னர் என்னை அதன் அதிகாரிகள் குடிநுழைவு அலுவலகத்துக்குக் கொண்டு  சென்றார்கள்.”

“சபாவுக்குள் நான் நுழைவதற்கு அனுமதிக்க மாநில அரசாங்கம் மறுத்துள்ளதாக என்னிடம் கூறப்பட்டது,” என
தியான் சுவா டிவிட்டரில் அனுப்பிய செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பத்து எம்பி-யுமான தியான் சுவா கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என மாநில முதலமைச்சர்
அலுவலகத்தில் உள்ள துணை அமைச்சரான நஸ்ருன் மான்சோர் கடந்த மாதம் கேட்டுக் கொண்ட பின்னர்
தியான் சுவா அந்த மாநிலத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

சபாவில் தியான் சுவா ‘ஏற்க முடியாத பண்பாட்டைப் பரப்புவதை’ தடுக்க அவர் கறுப்புப் பட்டியலில்
சேர்க்கப்பட வேண்டும் என லஹாட் டத்து சட்டமன்ற உறுப்பினருமான நஸ்ருன் கூறினார்.

லஹாட் டத்து ஊடுருவல் ‘ஒர் அம்னோ சதி’ என தியான் சுவா சொன்னதாக மார்ச் முதல் தேதி வெளியான
பிகேஆர் கட்சி ஏடான Keadilan Daily -யிடம் சொன்னதாக கூறப்படுகின்றது.

ஊடுருவல் பற்றி தொடக்கத்தில் எந்தத் தகவலும் வெளியிடப்படாதது குறித்தே தாம் அவ்வாறு சொன்னதாக
அவர் பின்னர் விளக்கினார்

கடந்த புதன் கிழமை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரம் விரைவில்
தொடங்கவிருக்கும் வேளையில் தியான் சுவா சபாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

அந்தத் தடை காலாவதியாகும் தேதி ஏதும் குறிப்பிடப்படவில்லை.”

“பொதுத் தேர்தல் பிரச்சாரக் காலம் வரை அது அமலில் இருக்கும் என நான் கருதுகிறேன். பக்காத்தான்
வெற்றி பெற்றால் அது ரத்துச் செய்யப்படும் என நம்புவோம்,” என தியான் சுவா தமது விடிட்டர் செய்தியில்
மேலும் குறிப்பிட்டுள்ளார்.