சட்டத்துறைத் தலைவர்: BR1M லஞ்சம் அல்ல

BRIMபிஎன் பராமரிப்பு அரசாங்கம் BR1M என்ற ஒரே மலேசியா உதவித் தொகை போன்றவற்றை வழங்குவது லஞ்சம் அல்ல. ஏனெனில் 2013ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என ஏஜி என்ற சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்ல் கூறுகிறார்.

10வது மலேசியத் திட்டம், 2013ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஆகியவற்றின் கீழ் நாடாளுமன்றமும் அரசாங்கமும் ஒதுக்கீடுகளை அங்கீகரித்திருந்தால் பராமரிப்பு அரசாங்கம் ஒப்பந்தங்களைச் செய்து கொள்ளலாம், வாக்குறுதிகளையும் கொடுக்கலாம் என அவர் விளக்கினார்.

“நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னதாக அரசாங்கம் அங்கீகரித்த தொகைகளும் அதில் அடங்கும்.”

“எடுத்துக் காட்டுக்கு BR1M என்ற ஒரே மலேசியா உதவித் தொகை முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனைப் பெறும் உரிமை மக்களுக்கு உண்டு,” என்றார் அவர்.

“ஆகவே இங்கு லஞ்சம் என்ற விஷயமே இல்லை. ஒரு நபர் உரிமை இல்லாததைப் பெறுவதும் நீங்கள் சாதகமாக நடந்து கொள்வதற்காக நான் கொடுப்பதும் தான் லஞ்சம் எனக் கருதப்படும்,” என அப்துல் கனி சொன்னார்.

ஏழை மக்களுக்கான வீடமைப்புத் திட்டங்கள், கடனுதவித் திட்டங்கள், நில உரிமைப் பத்திரங்களை வழங்குவது போன்ற நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ள திட்டங்களையும் கொள்கைகளையும் பராமரிப்பு அரசாங்கம் தொடர்ந்து அமல் செய்ய முடியும்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதால் பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் என்னும் முறையில் பிஎன் தலைவர் நஜிப் ரசாக் பிரதமர் என்ற ரீதியில் பிரச்சாரம் செய்யக் கூடாது என கடந்த வாரம் பாஸ் உதவித் தலைவர் மாஹ்புஸ் ஒமார் கூறியிருந்தார்.

பராமரிப்பு அரசாங்க அமைச்சர்கள் பிஎன் தலைவர்கள் என்னும் குறையில் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டுமே தவிர அமைச்சர்கள் என்ற தகுதியில் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ரொக்கமாகவோ, மானியமாகவோ, போனஸாகவோ அல்லது வேறு எந்த பொருள் வடிவத்த்திலோ கூட்டரசு நிதிகளிலிருந்து எந்த உதவி அல்லது ஒதுக்கீட்டைக் கொடுக்கவும் கூடாது அறிவிக்கவும் கூடாது என்பதே அதன் அர்த்தம் என்றார் மாஹ்புஸ்.