13வது பொதுத் தேர்தலில் இப்ராஹிம் அலி எப்படி நுழைவார் ?

aliபொதுத் தேர்தலில் பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி எந்தத் தொகுதியில் எந்தக் கட்சி சின்னத்தில்  போட்டியிடுவார் என்ற பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது.

2008 தேர்தலில் பாஸ் சின்னத்தில் வெற்றி பெற்ற இப்ராஹிம் பின்னர் அந்தக் கட்சியிலிருந்து விலகியது மட்டுமின்றி கிளந்தான் மந்திரி புசார் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட்-டையும் தாக்கிப் பேசியுள்ளார்.

அந்த மாநிலத்தில் அவர் பாஸ் திட்டங்களை ஆதரிப்பதற்குப் பதில் மாநில அரசுக்கு எதிராக செயல்பட்டார்.  கூட்டரசு நிலையில் தமது பெர்க்காசா அமைப்பைப் பயன்படுத்திக் கொண்டு மலாய்க்காரர்களுடைய வீரர்  என்றும் இஸ்லாத்தின் வீரர் என்றும் தம்மைக் காட்டிக் கொண்டுள்ளார்.

இப்ராஹிம் சொன்ன கருத்துக்கள் தலைப்புச் செய்திகளாகின. அவை சில அம்னோ தலைவர்களையும்
உறுப்பினர்களையும் வெகுவாகக் கவர்ந்தன. எதிர்க்கட்சிகளான பாஸ், பிகேஆர் கட்சிகளுக்கு முள்ளைப்
போன்று இருந்தன.

அவர் இப்போது பாஸ் கட்சிக்கு எதிராக எப்படிப் போட்டியிடப் போகிறார் ? பிஎன் வேட்பாளராகவா அல்லது
சுயேச்சையாகவா ?

இப்ராஹிமின் எதிர்காலத் திட்டங்கள் பிஎன் வேட்பாளருடையதைப் போன்று இருக்கும் என்பதால் அவர்
எப்படி உண்மையான சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட முடியும் ?

இப்ராஹிமுக்கு உள்ள ‘சில கூடுதல் அம்சங்கள்’, அவருக்கு விசுவாசமான பெர்க்காசா உறுப்பினர்களாகும்.
அவர்கள் மட்டுமே பிஎன் -னுக்கு வாக்களிக்காமல் இப்ராஹிமுக்கு வாக்களிப்பார்கள்.

ஆனால் அந்த நிலையை பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் நிச்சயம் வரவேற்க மாட்டார். காரணம் அவர்
எல்லா அம்னோ வேட்பாளர்களும் வெற்றி பெறுவதைக் காண விரும்புகிறார். அத்துடன் அவர்
வேட்பாளர்களைத் துல்லிதமாகத் தெரிவு செய்துள்ளார்.

அவர் பிஎன் -னுக்கு நட்புறவான வேட்பாளராகப் போட்டியிட்டு, பாசிர் மாஸில் பிஎன் எந்த வேட்பாளரையும்
நிறுத்தா விட்டால் இப்ராஹிம் எளிதாக வெற்றி பெற்று விடலாம். ஆனால் அது நடக்குமா ?

இப்ராஹிம் அலியை அம்னோவுக்குள் சேர்க்க முடியாது. ஏனெனில் அவரை முன்னாள் அம்னோ தலைவர்
அப்துல்லா அகமட் படாவி ஆயுட்காலத்துக்கு நீக்கி வைத்துள்ளார். அனைத்து உச்ச மன்ற
உறுப்பினர்களுடைய முழு இணக்கத்தையும் நஜிப் பெற்றால் மட்டுமே இப்ராஹிமை மீண்டும் அம்னோவுக்குள்  சேர்க்க முடியும்.

நஜிப் தலைமைத்துவத்தின் கீழ் அம்னோ இப்போது இப்ராஹிமைச் சேர்த்துக் கொள்ளுமா ?

மலாய் மெயில்