பிகேஆர்: பராமரிப்பு அரசாங்க நிலையை BN தவறாக பயன்படுத்துகின்றது

nurulபராமரிப்பு அரசாங்கப் பிரதமரும் அவரது அமைச்சர்களும் தங்களது அதிகாரத்துவ கார்களை திரும்ப  ஒப்படைக்க வேண்டுமென பிகேஆர் இன்று சவால் விடுத்துள்ளது.

பிஎன் பிரச்சாரத்துக்கு அரசாங்க எந்திரத்தை பராமரிப்பு கூட்டரசு அரசாங்கம் பயன்படுத்தக் கூடாது என்றும்  பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் இன்று சொன்னார்.

“அவற்றுள் பிரச்சார நோக்கத்திற்குப் பயன்படுத்தப்படும் கோலாலம்பூர் மாநகர மண்டபமும் அடங்கும்,” என அவர் இன்று நிருபர்களிடம் கூறினார்.

சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்டதும் தங்களது அதிகாரத்துவ கார்களை திரும்ப ஒப்படைக்குமாறு  ஆட்சி மன்ற உறுப்பினர்களைக் கேட்டுக் கொள்ளும் சுற்றறிக்கையை அந்த மாநில அரசாங்கம் வெளியிட்டது.

அதே வேளையில் பினாங்கு பராமரிப்பு அரசாங்க ஆட்சி மன்ற உறுப்பினர்கள் கடந்த வாரம் தங்களது அதிகாரத்துவ கார்களை ஒப்படைத்து விட்டனர்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது முதல் பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரது அமைச்சர்களும் தங்கள் பதவிகளைத் தவறாகப் பயன்படுத்தி வருவதாகவும் நுருல் இஸ்ஸா சொன்னார்.

ஏப்ரல் மூன்றாம் தேதிக்குப் பின்னர் வெளியிடப்பட்ட தொடர்ச்சியான அறிவிப்புக்களிலிருந்து அது தெளிவாக தெரிகிறது என்றார் அவர்.

ஏப்ரல் 5ம் தேதி சைபர் ஜெயாவில் 8 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள திட்டங்கள் அறிவிக்கப்பட்டதும் ஏப்ரல் 8ம் தேதி ஒய்வூதியக்காரர்களுக்கு ஒரே மலேசிய சலுகை கார்டுகள் விரிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டதும் அவற்றுள் அடங்கும்.

“பிரச்சாரத்துக்கும்” நிர்வாகத்துக்கும் இடையிலான வேறுபாட்டையும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துக்கும் பராமரிப்பு அரசாங்கத்துக்கும் இடையிலான வேறுபாட்டையும் புரிந்து கொள்ள பிஎன் தவறியிருப்பது, அது தனது பொறுப்பை நேர்மையாக நிறைவேற்ற முடியாது என்பதையும் மக்களுக்கு உருப்படியான மாற்றங்களைக்  கொண்டு வர முடியாது என்பதையும் நிரூபித்துள்ளது,” என்றும் நுருல் இஸ்ஸா சொன்னார்.