வங்சா மாஜுவை அம்னோவுக்குக் கொடுக்க முடியாது; மசீச ஆதரவாளர்கள்

1 mcaமசீச, வங்சா மாஜுவை அம்னோவுக்கு விட்டுக்கொடுத்திருப்பதாக வதந்திகள் உலவுவதை அடுத்து அத்தொகுதி மசீச ஆதரவாளர்களிடையே அதிருப்தி அதிகரித்து வருகிறது.

1mca 1 yewநேற்றிரவு ஒரு விருந்தில் கூடிய சுமார்  3,000 மசீச உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் வங்சா மாஜு மசீச தொகுதி தலைவர் இயு தியோங் லூக் (வலம்)-தான் அத்தொகுதி பிஎன் வேட்பாளராகக் களமிறக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

கட்சி உறுப்பினர் சிலர், காலங்காலமாக  மசீச போட்டியிட்டு வந்த அந்த இடத்தை அம்னோவுக்கு விட்டுக்கொடுப்பது பற்றி அடிநிலை உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்காத கட்சித் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் மீது ஆத்திரத்துடன் பொறிந்து தள்ளினர்.

டானாவ் கோத்தாவில் நடைபெற்ற அவ்விருந்துக்கு அவ்வட்டாரத்தில் உள்ள சுமார் 80 அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன.

மழை பெய்தாலும் குடையைப் பிடித்துக்கொண்டு இயு-வின் ஆதரவாளர்கள் அந்நிகழ்வுக்கு வந்திருந்தனர். அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் பதாதைகளைத் தொங்க விட்ட அவர்கள், ஒருவர்பின் ஒருவராக மேடை ஏறி வங்சா மாஜுவின் பிஎன் வேட்பாளராக இயு-வையே தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.

1 mca2மசீசவில் நீண்ட காலம் இருப்பதாகக் கூறிக்கொண்ட  சமூகத் தலைவர் லிம் செங் ஹொக், சுவாவை ஒரு “kiasu” (பயந்தாங்கொள்ளி) என்று வருணித்தார்.

வங்சா மாஜுவில் மலாய் வாக்காளர்கள் 50விழுக்காட்டுக்குமேல் இருப்பதால் அதை அம்னோவுக்குக் கொடுப்பதாகச் சொல்லப்படும் வாதத்தை அவர் நிராகரித்தார்.

“அப்படியானால் லாபிஸ், பண்டார் துன் ரசாக் ஆகியவற்றையும் அம்னோவுக்கே கொடுக்கலாமே, ஏன் கொடுக்கவில்லை?”, என்றவர் வினவினார்.

“இப்படி ஒரு பெரிய முடிவைச் செய்யுமுன்னர் தலைவர் ஏன் அதைப் பற்றிக் கட்சி உறுப்பினர்களிடம் தெரிவிக்கவில்லை?”.

பிஎன் வேட்பாளராக நிறுத்தப்படவில்லை என்றால் இயு, சுயேச்சை வேட்பாளராக அங்குப் போடியிட வேண்டும் என்றும் லிம் கேட்டுக்கொண்டார்.

ஒரு தடவை அம்னோவுக்குக் கொடுத்துவிட்டால் பிறகு அத்தொகுதி திரும்பவும் கிடைக்காது என்று மசீச உறுப்பினர்கள் அஞ்சுகின்றனர்.

இறுதியாகப் பேசிய இயு, “மக்களின் குரலைக் கேட்டேன்”, ஆனாலும் கட்சி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் முன்வைத்த கருத்துக்களைப் பரிசீலிக்க அவகாசம் தேவை என்று கூறினார்.

பின்னர், செய்தியாளர்கள் அவரைச் சந்தித்து, பிஎன் அவரை வங்சா மாஜு வேட்பாளராக அறிவிக்காவிட்டால் சுயேச்சையாக போட்டியிடுவாரா என்று வினவியதற்கு இயு பதிலளிக்க மறுத்தார்.

1 mca 3திங்கள்கிழமை அவசரக்கூட்டம் நடத்திய வங்சா மாஜு மசீச தொகுதி, இயுவை வேட்பாளராக நிறுத்தாவிட்டால் தேர்தல் பரப்புரையைப் புறக்கணிப்பதென முடிவு செய்தது.

2008 தேர்தலில் இயு, பிகேஆரின் வீ சூ கியோங்கிடம் 150 வாக்குகள் வேறுபாட்டில் தோற்றார். வீ, 2010-இல் பிகேஆரைவிட்டு விலகி பிஎன்-ஆதரவு சுயேச்சை எம்பி ஆனார்.

கோலாலும்பூரில்   பல்லினக்கள் சேர்ந்துவாழும் அத்தொகுதிமீது 2008-இலிருந்தே வங்சா மாஜு  அம்னோ கண் வைத்துள்ளது. அங்கு அதன் தலைவரும் அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கின் அரசியல் செயலாளருமான ஷாபி அப்துல்லாவைக் களமிறக்க அது விரும்புகிறது.

சீன நாளேடுகளில் கடந்த வாரத்திலிருந்தே, வங்சா மாஜு, ஜோகூரில் கேலாங் பாத்தா உள்பட ஒரு சில நாடாளுமன்றத் தொகுதிகளை மசீச விட்டுக்கொடுக்கும் என்ற செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

ஆனால், சுவா, பேராக்கில் துரோனோ சட்டமன்ற இடம் மட்டுமே மஇகாவுக்கு “இரவல்” கொடுக்கப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இம்முடிவைத் தம் முகநூல் பக்கத்தில் நியாயப்படுத்தியுள்ள சுவா, மசீச உறுப்பினர்கள் அமைதிகாக்க வேண்டும் என்றும் பிஎன்னுக்கு எதிராக வேலை செயல்படக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

TAGS: