தொடர் விவாதங்களை நடத்த வருமாறு கிட் சியாங் மகாதீருக்குச் சவால்

kit siangடாக்டர் மகாதீர் முகமட்-டின் ‘அதிகமான சுறு சுறுப்பினாலும்’ ‘ இன துவஷேச சொற்களினாலும்’  வெறுப்படைந்துள்ள லிம் கிட் சியாங்,  தமது 22 ஆண்டு பிரதமர் பதவிக் காலம் பற்றி விவாதம் நடத்த வருமாறு மகாதீருக்குச் சவால் விடுத்துள்ளார்.

கடந்த 100 நாட்களில் மகாதீர் மேற்கொண்ட நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு அவருடன் தொடர்ச்சியாக  ஏழு விவாதங்களை நடத்த விரும்புவதாக அந்த டிஏபி மூத்த தலைவர் சொன்னார்.

அண்மைய காலமாக மகாதீர் ‘மிகவும் சுறுசுறுப்பாக’ இயங்குவதாகக் குறிப்பிட்ட லிம், அதனால் வரும் பொதுத் தேர்தல் இரட்டை பொது வாக்கெடுப்பாக மாறி விட்டதாகக் கூறினார்.

முதலாவது நஜிப் அப்துல் ரசாக்கின் பிரதமர் பதவிக் காலம் பற்றியதாகும். இரண்டாவது மகாதீர் 22 ஆண்டு கால ஆட்சி பற்றியதாகும்.

அந்த முன்னாள் பிரதமருடைய ஆட்சியில் ‘மனித உரிமை அத்துமீறல்களும் பெரிய நிதி முறைகேடுகளும் நீதித்  துறை, போலீஸ், அரசாங்கச் சேவை ஆகிய தேசிய அமைப்புக்களுடைய சுதந்திரம் கீழறுப்புச் செய்யப்பட்டதும்  ‘நிகழ்ந்துள்ளதாக அவர் சொன்னார்.kit siang1

“அத்துடன் அந்த முன்னாள் பிரதமர் அம்னோவில் மிகவும் வலுவானவராகவும் ஏன் நடப்புப் பிரதமரும்  அம்னோ தலைவருமான நஜிப்பை விட வலுவானவராகவும் இருப்பது கடந்த 100 நாட்களில் தெளிவாகத் தெரிந்துள்ளது.”

“ஆகவே நஜிப்-பின் நான்கு ஆண்டு கால பிரதமர் பதவி, அவரது தேசிய உருமாற்றத் திட்டங்கள், மகாதீரின்  22 ஆண்டு கால பிரதமர் பதவி ஆகியவை குறித்த இரட்டை பொது வாக்கெடுப்பாக வரும் தேர்தல்  உருவெடுத்துள்ளது,” என லிம் இன்று விடுத்த அறிக்கை கூறியது.

அவர் கேலாங் பாத்தா நாடாளுமன்றத் தொகுதியில் டிஏபி வேட்பாளராக போட்டியிடவிருக்கிறார். மகாதீர் ‘பொறுப்புள்ள மூத்த அரசியல் மூதறிஞராக’ நடந்து கொண்டு ‘இன வெறுப்பையும் இன உணர்வுகளையும்’ தூண்டும் அறிக்கைகளை வெளியிடக் கூடாது என்றும் லிம் வலியுறுத்தினார்.

அத்தகைய அறிக்கைகள் மகாதீருடைய சொந்த பாங்சா மலேசியா கோட்பாட்டுக்கும் 2020 இலட்சியத்துக்கும் முரணானவை என்றும் லிம் சொன்னார்.

விவாதம் நடத்த வருமாறு எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் விடுத்துள்ள வேண்டுகோளை மே 5ம்  தேதிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள தேர்தலுக்கு முன்னதாக ஏற்றுக் கொள்ளுமாறும் அவர் நஜிப்பைக் கேட்டுக் கொண்டார்.

TAGS: