இப்ராஹிம் அலிக்கும் கோபால கிருஷ்ணனுக்கும் நம்பிக்கை ஒளி

gopalaகடந்த மக்களவையிலும் மாநிலச் சட்டமன்றங்களிலும் பிஎன் கூட்டணிக்கு ஆதரவாக இருந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்கள், பொருத்தமான வேட்பாளர்களாக இருந்தால் வரும் பொதுத் தேர்தலில்  பிஎன் சின்னத்தில் அவர்கள் போட்டியிடுவதற்கு அனுமதிக்க பிஎன் தயாராக உள்ளது என நஜிப் அப்துல்  ரசாக் கூறியுள்ளார்.

அத்தகையவர்களுக்கு பிஎன் -னைப் பிரதிநிதிப்பதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டால் அவர்கள் உறுப்புக் கட்சிகள் எதிலும் சேர வேண்டிய அவசியம் இல்லை என பிஎன் தலைவருமான நஜிப் சொன்னார்.

என்றாலும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான இடங்கள் எண்ணிக்கை சிறிதாகவே உள்ளது என்றும் அத்துடன் 2008 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்றும் அவர் சொன்னார்.

“நமக்கு நட்புறவாக உள்ளவர்கள் பொருத்தமான வேட்பாளர்களாக இருந்தால் வரும் பொதுத் தேர்தலில் பிஎன் சின்னத்தில் அவர்கள் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்கவும் அனுமதி வழங்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என கோலாலம்பூர் புத்ரா உலக வாணிக வளாகத்தில் பிஎன் தேர்தல் எந்திரத்துடம் கூட்டம் நடத்திய பின்னர் நஜிப் நிருபர்களிடம் கூறினார்.

சுயேச்சையாக மாறி தங்களை பிஎன் நட்புறவு உறுப்பினர்களாக பிரகடனம் செய்து கொண்ட சில எதிர்க்கட்சி உறுப்பினர்களில் இப்ராஹிம் அலி (பாசிர் மாஸ்), சுல்கிப்லி நூர்டின் ( கூலிம் பண்டார் பாரு), ஸாஹாரின் ஹஷிம் (பாயான் பாரு) ஆகியோரும் அடங்குவர்.

2008ல் பிகேஆர் சார்பில் பாடாங் செராயில் நின்று வெற்றி பெற்று பின்னர் சுயேச்சை எம்பி-யாக மாறிய என் கோபால கிருஷ்ணன் அந்தத் தொகுதியில் தாம் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு பிஎன் -னை நேற்று கேட்டுக் கொண்டார்.

-பெர்னாமா