சைபுடின்: தேர்தல் கொள்கை அறிக்கைகள் யாருடையது என்பது மீது வாக்குவாதம் வேண்டாம்

saifஅரசியல் களத்தில் இரு புறமும் உள்ளவர்கள், தாங்கள் தேர்தல் கொள்கை அறிக்கைகள் யாருடைய  சிந்தனையில் உருவானது என்பது மீது வாக்குவாதம் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என அம்னோ  உச்சமன்ற உறுப்பினர் சைபுடின் அப்துல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.

அதற்குப் பதில் அவர்கள் அந்தத் தேர்தல் கொள்கை அறிக்கைகள் குறித்து முறையான கருத்துக்களை  வெளியிட வேண்டும் என்றார் அவர்.

“அத்தகைய வாக்குவாதத்தில் நாம் இறங்கக் கூடாது,” என விவாத அரங்கம் ஒன்றின் போது எழுப்பபட்ட கேள்விக்குப் பதில் அளித்த சைபுடின் சொன்னார்.

வரும் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கப் போகும் முக்கிய அம்சங்கள் பற்றிய அந்த விவாத்தின் போது இரண்டு  தேர்தல் கொள்கை அறிக்கைகளும் யாருடைய சிந்தனையில் உருவானவை என்பது மீது கேள்வி எழுப்பப்பட்டது.

அஸ்லி என்ற ஆசிய வியூக தலைமைத்துவ ஆய்வியல் கழகம், யூ டியூப், கினிடிவி ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் அந்த விவாத அரங்கத்தை நடத்தியது.

saif1“நாம் விவாதங்களை மேலும் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும்,” என சைபுடின் சொன்னார்.

அந்த நிகழ்வில் அவருடன், அவருடைய பிஎன் சகாவான கான் பிங் சியூ, பாஸ் வியூகவாதி முஜஹிட் யூசோப்  ராவா டிஏபி வியூக இயக்குநர் லியூ சின் தொங் ஆகியோரும் பேசினர்.

“தேர்தல் கொள்கை அறிக்கைகளில் காணப்படும் ஒற்றுமைகளை மக்கள் சாதகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு தரப்பும் தங்கள் கொள்கைகள் மூலம் ஒருமுகமான நிலைக்கு வருவதை அது காட்டுகின்றது.”

சைபுடின் அம்னோவில் வெளிப்படையாகப் பேசக் கூடியவர் எனக் கருதப்படுகிறார்.

பிஎன் தங்கள் தேர்தல் கொள்கை அறிக்கையை ‘காப்பி’ அடித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறிக் கொள்வதை அவரது பிஎன் சகாவான கான் நிராகரித்தார். ‘சிந்தனைகள் மீது யாருக்கும் ஏகபோகமில்லை’ என்றார் அவர்.

“நல்ல ஆளுமை, கல்வி, நல்ல சாலைகள் ஆகிய எண்ணங்கள் எல்லோருக்கும் பொதுவானவை. ஆகவே சிந்தனைகள் மீது நீங்கள் ‘ஏகபோக உரிமை’ கொண்டாடக் கூடாது.”

saif3அந்த விவாத அரங்கின் முடிவில் அஸ்லி இயக்குநர் டாக்டர் ரேமன் நவரத்னம் பேசினார். சிந்தனைகள் மீது  எந்தக் கட்சிக்கும் ஏகபோக உரிமை இருக்கக் கூடாது என்பதைத் தாம் ஒப்புக் கொள்வதாக அவர் சொன்னார்.

“ஆனால் பிஎன் -னும் பக்காத்தானும் இன்று மோதிக் கொண்டதாகவே தெரியவில்லை. அவற்றுக்கு இடையில்  அதிகமான ஒற்றுமைகள் தெரிந்தன.”

‘விவாதம் நிகழலாம்’

பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கும் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கும் இடையில் விவாதம் நிகழக்கூடிய சாத்தியம் இன்னும் உள்ளதாக விவாத அரங்க முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய சைபுடின் தெரிவித்தார்.

‘இரண்டு பிரமுகர்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய’ மூன்றாம் தரப்பு அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்  என அவர் சொன்னார்.

saif4பல விவாதங்களிலும் கலந்துரையாடல்களிலும் ஆளும் கூட்டணியைப் பிரதிநிதித்துள்ள சைபுடின் ‘விவாதங்கள்  பண்பாட்டை’ வெளிப்படையாக ஆதரித்து வருகிறார்.

“இன்றைய நிகழ்வு நான் முஜாஹிட்-க்குச் சவால் விடுப்பதோ அல்லது அவர் எனக்குச் சவால் விடுப்பதோ  அல்ல. அஸ்லி எங்களை அழைத்தது. நாங்கள் வருவதற்கு ஒப்புக் கொண்டோம். அதே போன்று மூன்றாம்  தரப்பும் அந்த நடைமுறையைத் தொடங்கி இரு தலைவர்களுடனும் விவாதிக்க வேண்டும்,” என்றார் அவர்.

“நீங்கள் அதனை முறையாகச் செய்தால் அதனைச் செய்ய முடியும். முன்பு செய்யப்படவில்லை என்பது  காரணமாக முடியாது,” என சைபுடின் புன்னகையுடன் கூறினார்.