‘தியான் சுவா-வுக்கு எதிரான தேச நிந்தனை குற்றச்சாட்டுக்களைக் கைவிடுங்கள்’

tian‘அரசியல் நோக்கத்துடன்’ பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா-வுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள தேச  நிந்தனைக் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் கைவிட வேண்டும் என்றும் அவருடைய பாதுகாப்புக்கு மருட்டலாக  இருக்கின்றவர்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனைத்துலக அரசு சாரா  அமைப்பான மனித உரிமைக் கண்காணிப்பு (HRW) அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

“ஊடகங்களில் தமது கருத்தைத் தெரிவித்ததற்காக எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் மீது பொதுத் தேர்தலுக்கு  முன்னதாக தேச நிந்தனைக் குற்றச்சாட்டை சுமத்துவது ஜனநாயக நடைமுறைகளை நேரடியாக தாக்குவதற்கு  இணையானது.”

“அரசு தரப்பு வழக்குரைஞர்கள் அந்த நாடகத்தை முடித்துக் கொண்டு தியான் சுவா மீது ‘அரசியல்
நோக்கத்துடன்’ சுமத்தப்பட்டுள்ள தேச நிந்தனைக் குற்றச்சாட்டுக்களை கைவிட வேண்டும்,” என HRW
அமைப்பின் ஆசியப் பிரிவு துணை இயக்குநர் பில் ரோபர்ட்சன் ஒர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

லஹாட் டத்து ஊடுருவல் தொடர்பில் தியான் சுவா சொன்ன கருத்துக்களுக்காக நடப்பு பத்து எம்பி-யுமான
அவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 5,000 ரிங்கிட்
வரையில் அபராதமும் விதிக்கப்படலாம். அதனால் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதியை இழக்கக் கூடிய
நிலையும் ஏற்படலாம்.

லஹாட் டத்து ஊடுருவல் மக்களை அச்சுறுத்தி, சபாவில் வாக்குகளுக்காக குடியுரிமை வழங்கப்பட்டதாக
கூறப்படுவது மீது நிகழும் அரச விசாரணை ஆணைய விசாரணையிலிருந்து மக்களைத் திசை திருப்பும்
நோக்கத்தைக் கொண்டது என மார்ச் முதல் வெளியான பிகேஆர் கட்சி ஏடான கெஅடிலான் நாளேட்டில்
தியான் சுவா கூறிக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்துள்ளதாக வதந்திகள் பரவிய போதிலும் உயிருடற்சேதங்கள்,
அல்லது தாக்குதல்கள் பற்றி ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டதையே தாம் அவ்வாறு குறிப்பிட்டதாக
தியான் சுவா பின்னர் விளக்கினார்.

அனைவருக்கும் சமமான சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்

என்றாலும் அவர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்துள்ளன.
அவற்றுள் சில வன்முறை எதிர்ப்பாக இருந்தன.

“தேர்தல் பிரச்சாரம் தொடங்கும் வேளையில் எல்லா வேட்பாளர்களுக்கும் சமமான சட்டப் பாதுகாப்பு வழங்க
வேண்டிய பொறுப்பு தனக்கு இருப்பதை அரசாங்கம் மறக்கக் கூடாது.”

“தியான் சுவா-வுக்கு எதிரான மருட்டல்கள் உடனடியாக நிற்க வேண்டும். அவை குறித்து உடனடியாக
பாரபட்சமற்ற விசாரணை தொடங்க வேண்டும். அதற்குப் பொறுப்பானவர்கள் எனக்
கண்டுபிடிக்கப்படுகின்றவர்கள் மீது வழக்குப் போடப்பட வேண்டும்,” என ரோபர்ட்சன் வலியுறுத்தினார்.