பொதுத் தேர்தலில் டாக்டர் சுவா சொய் லெக் போட்டியிட மாட்டார். தேர்தலில் களமிறக்கப்படாத முதலாவது மசீச தலைவர் அவர் ஆவார்.
கட்சியில் புதுமுகங்கள் உருவாகி கட்சி மறு தோற்றம் பெறுவதற்கும் அது உதவும் என்றும் அதே வேளையில் தாம் நாடு முழுவதும் பயணம் செய்து மசீச-வுக்குப் பிரச்சாரம் செய்ய முடியும் என்றும் சுவா சொன்னார்.
“கட்சி காலத்திற்கு ஏற்றவாறு மாற்றம் காண புதிய இளம் தலைவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று நான் கூறியதற்கு ஏற்ப நடந்து கொண்டுள்ளேன்.”
“நான் என்னை வேட்பாளராக அறிவித்துக் கொண்டால் இது நாள் வரை நான் பேசியது எல்லாம் சுய நலமாகி விடும்.”
“மசீச காலத்திற்கு பொருத்தமானதாக இருப்பதற்கு நான் போராடுகிறேன் என்பதை நான் மெய்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுப் பதவி எதற்கும் நிற்காமல் கட்சியை நான் தொடர்ந்து வழி நடத்துவேன்,” என சுவா விடுத்த அறிக்கை தெரிவித்தது.
மசீச வரும் தேர்தலில் நிறுத்தும் வேட்பாளர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர் புதுமுகங்கள் என்றும் அவர் சொன்னார். “வலுவான சவாலை விடுப்பதற்கு” பொருத்தமான குழுவை தெரிவு செய்துள்ள கட்சி நம்புகிறது என்றார் அவர்.
‘நான் முழு நேரத் தலைவர்’
2008க்கும் 2010க்கும் இடையில் மசீச-வுக்குள் உட்பூசல் நிலவிய பின்னர் கட்சிக்கு புத்துயிரூட்ட தொடங்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் ஒரு பகுதியே இது என்றும் சுவா சொன்னார்.
2010ம் ஆண்டு மார்ச் மாதம் தாம் தலைவரான பின்னர் கட்சியை வலுப்படுத்துவதற்குத் தாம் முழு நேரமும் வேலை செய்வதை அவர் சுட்டிக் காட்டினார்.
“மசீச வரலாற்றில் முழு நேரத் தலைவர் பணியாற்றுவது இதுவே முதன் முறையாகும்.”
“பொதுத் தேர்தலிலும் நான் அந்தப் பணியை தொடர விரும்புகிறேன். நான் பிஎன் வேட்பாளர்களுக்குக் குறிப்பாக மசீச வேட்பாளர்களுக்கு நான் முழு நேரப் பிரச்சாரத்தில் ஈடுபட முடியும்,” என்றார் சுவா.
இதற்கு முன்னர் சுவா “தாம் எங்கு சென்றாலும் வெற்றி பெறக் கூடிய வேட்பாளர்” எனக் கூறிக் கொண்டிருந்தார். சுவா சம்பந்தப்பட்ட செக்ஸ் வீடியோவினால் கட்சி தேக்கமடைந்து விட்டதாக அவருக்கு முந்திய கட்சித் தலைவர் ஒங் தீ கியாட் கூறியதற்கு பதில் அளித்த போது சுவா அவ்வாறு சொன்னார்.